×

டெல்லி ராணுவ மருத்துவமனையில் அபிநந்தனிடம் 2வது நாளாக மருத்துவ பரிசோதனை: உளவுக் கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை

புதுடெல்லி: டெல்லி ராணுவ மருத்துவமனையில் விமானி அபிநந்தனிடம் தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவரது உடலில் எந்த உளவுக்கருவிகளும் பொருத்தப்படவில்லை  என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்திய வான் எல்லையில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் எப்16 போர் விமானத்தை இந்திய விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். அதே நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத்தால் அவரது மிக்-21  விமானம் சுடப்பட்ட நிலையில், பாராசூட் மூலம் உயிர் தப்பி, அந்நாட்டு எல்லையில் விழுந்தார். அவரை கைது செய்த பாகிஸ்தான் ராணுவம், 2 நாள் சிறை பிடித்து வைத்திருந்தது. பின்னர், சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை  தொடர்ந்து அபிநந்தன் கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
வாகா எல்லையில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர் விமானப்படை விமானம் மூலமாக இரவு 11.45 மணிக்கு டெல்லி வந்தடைந்தார். முதலில் விமானப்படை மருத்துவமனையில் அவர் பரிசோதித்து  பார்க்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் பரிசோதனை தொடங்கிய நிலையில் 2வது நாளாக நேற்றும் பல்வேறு மருத்துவ சோதனைகள்  மேற்கொள்ளப்பட்டன.

அபிநந்தனின் உடலில் ஏதாவது உளவு கருவிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது. அதில், எந்த உளவு கருவிகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில்,  இடுப்பு எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானம் தாக்கப்பட்டதும், பாராசூட் மூலம் அபிநந்தன் வெளியேறும் சமயத்தில் இந்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.பொதுவாக, பாராசூட் மூலம் வெளியேறும் போது ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக, இடுப்பு எலும்பு பாதிக்கும் அபாயம் உண்டு. இதுதவிர, பாகிஸ்தான் ராணுவத்தால் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அபிநந்தன்  கூறியிருக்கிறார். இது குறித்தும், பல்வேறு விசாரணை அமைப்பு அதிகாரிகள் அபிநந்தனிடம் நேற்று விசாரணை நடத்தினர். இந்த மருத்துவ அறிக்கையை தொடர்ந்தே அவர் மீண்டும் போர் விமானியாக சேவையில் தொடருவது குறித்து உறுதி செய்யப்படும். அபிநந்தன் விரைவில் போர் விமானத்தில் மீண்டும் பறப்பார் என்பதை உறுதி செய்வதற்கான  சோதனைகளே தற்போது நடப்பதாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நச்சிகேட்டாவுக்கு நேர்ந்த பரிதாபம்
1999ம் ஆண்டு கார்கில் போரின் போது, இந்திய விமானி நச்சிகேட்டா, விமானக் கோளாறு காரணமாக பாராசூட் மூலம் தரை இறங்கி பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். அப்போது அவருக்கு எலும்பு முறிவு  ஏற்பட்டது. மேலும், 8 நாட்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார். அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்த பிறகு போதிய உடல் தகுதி இல்லாததால் மீண்டும் போர் விமானத்தை ஓட்ட முடியாமல்  போனது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : examination ,Delhi Army Hospital ,Abhinandan , Delhi Army, Hospital,Abhinandan
× RELATED இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப...