×

பாலகோட் ஜெய்ஷ் இ முகமது முகாம் மீது இந்தியா குண்டு வீசியது உண்மையே: மசூத் அசாரின் சகோதரன் ஒப்புதல் 30 சடலத்தை பார்த்த கிராம மக்கள்

புதுடெல்லி:  ‘‘ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாம் மீது இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியது உண்மைதான்’’ என அந்த அமைப்பின் நிறுவனர் மசூத் அசாரின் சகோதரர் மவுலானா அமர் ஒப்பு  கொண்டுள்ளார்.காஷ்மீர் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில்,  பாலகோட்டில் உள்ள மிகப்பெரிய பயிற்சி முகாமின் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. சுமார் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இத்தகவலை பாகிஸ்தான் அரசு மறுத்தது. மலை  உச்சியில் காலியாக இருந்த இடத்தில் இந்திய விமானங்கள் குண்டு வீசியதாகவும், அதில் எந்த உயிர்சேதமும் இல்லை என்றும் கூறியது.

இந்நிலையில், ஜெய்ஷ் இ முகமது முகாம் மீது இந்திய விமானங்கள் குண்டுவீசியது உண்மைதான் என அந்த அமைப்பின் நிறுவனர் மசூத் அசாரின் சகோதரன் மவுலானா அமர் ஒப்புக் கொண்ட ஆடியோ பதிவு வெளியாகி  உள்ளது. தாக்குதல் நடந்த அடுத்த நாள் பெஷாவரில் நடந்த மதச் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றில் அவர் ஆவேசமாக பேசியதாவது:மலைகளை தாண்டி நமது நிலப்பரப்புக்குள் நுழைந்து, நமது மதப்பயிற்று மையத்தின் மீது எதிரிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். நமது அமைப்பின் தலைமையகம் என நினைத்து அந்த பயிற்று மையத்தின் மீது அவர்கள்  குண்டு வீசியிருக்கிறார்கள். எப்போது மலையை கடந்தார்கள், தாக்குதல் நடத்தினார்கள் என்பதற்கான அனைத்து கேள்விகளுக்கும் பதில் வைத்துள்ளார்கள். இதன் மூலம் எதிரிகள் நமக்கு எதிரான போரை அறிவித்திருக்கிறார்கள்.அதே நேரத்தில் நமது தலைமையகம் உள்ளிட்ட பிற முகாம்கள் எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. காஷ்மீர் போராளிகளுக்கு உதவி செய்வதற்கான பயிற்சி பெறும் மாணவர்கள் தங்கியுள்ள மையத்தில் மட்டும் தாக்குதல்  நடத்தி இருக்கிறார்கள். எனவே, இந்த தாக்குதலின் மூலம், இந்தியாவுக்கு எதிராக புனிதப் போரை நாம் தொடங்க வேண்டுமென்பதை அவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.இந்தியா நடத்திய தாக்குதல் தொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்த கிராம மக்கள் கூறிய தகவல்களும் வெளியாகி உள்ளன. அவர்கள் கூறுகையில், ‘‘பாலகோட்டின் குடியிருப்பு பகுதிகளை தாண்டி  மலை உச்சியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம் இருப்பது பொதுவாக தெரிந்த விஷயம். அங்கு ஒரு மதப்பயிற்று பள்ளி உண்டு.  அந்த இடத்திற்கு அவ்வளவு எளிதில் யாரும் சென்று விட முடியாது. குண்டு வீசப்பட்ட  அன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதை போன்று உணர்ந்தோம். உடனே நாங்கள் சென்று பார்த்த போது, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருந்தன. சுமார் 30 சடலங்கள் வரை பார்த்தோம். பின்னர்  பாகிஸ்தான் ராணுவம் அந்த இடத்தை சுற்றிவளைத்து யாரையும் அனுமதிக்கவில்லை’’ என்றனர்.இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் முன்னாள் உயர் அதிகாரி ஒருவரும் பலியானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அல்ஜசீரா தொலைக்காட்சி நிருபர், ஜெய்ஷ் இ முகமது முகாம் மீது தாக்குதல்  நடத்தப்பட்ட பாலகோட்டின் ஜனா மலைப்பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட்டுள்ளார். அங்கு மிகப்பெரிய தாக்குதல் நடத்திருப்பதாக சாத்தியக்கூறுகள் இருப்பதையும் அந்த டிவி சேனல் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

3 ஏக்கரில் சொகுசு தலைமையகம்
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையகம் தொடர்பான தகவல்களும் வெளியாகி உள்ளன. இந்த அமைப்பின் தலைமையகம் ‘மர்காஸ் சுபான் அல்லா’ என்ற பெயரில் பகாவல்பூரில் அமைந்துள்ளது. ஜெய்ஷ்  தீவிரவாதிகள் இங்கு நுழைவதற்கான நுழைவாயிலாகத்தான் பாலகோட் முகாம் செயல்பட்டிருக்கிறது. அங்கு பயிற்சி முடித்தவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர். இந்த தலைமையகம் 3  ஏக்கர் பரப்பளவில் 600 பேர் தங்கும் வசதிகளுடன் அமைந்துள்ளது. அமைப்பின் நிறுவனர் மசூத் அசார், அவரது சகோதரர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய கூட்டாளிகள் வசிப்பது இங்குதான். கடந்த 2012ல் தொடங்கி 3  ஆண்டுகள் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப் ஆட்சிக் காலத்தில், மாகாண அரசு மற்றும் ஷெரீப் அரசின் ஒத்துழைப்போடு இக்கட்டிடம் சொகுசு வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கான  நிதி மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து திரட்டப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : camp ,India ,brother ,Balakot Jaish e Mohammed ,Masud Azar , Balakot Jaish e Mohammed ,camp,bombed, Masood Azar's brother approves
× RELATED ஈர நில பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்