×

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

கோவை: கோவை அருகே உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் உள்ள 5வது அணி பழுது நீக்கும் மையம் மற்றும் ஆந்திர மாநிலம் கக்கிம்பேட் விமானப்படை தளத்துக்கு சிறந்த சேவைக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான விழா நாளை (4ந் தேதி) காலை 9 மணிக்கு சூலூர் விமானப்படை தளத்தில் நடக்கிறது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். விருதுகளை வழங்கும் அவர் தொடர்ந்து நடைபெறும் விமான சாகசங்களை பார்வையிடுகிறார். விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பிற்பகல் 12.35 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக மதியம் 3.30 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் கோவை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் வேலுமணி மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் ஜனாதிபதி கார் மூலம் கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். இரவில் அங்கு ஓய்வெடுக்கிறார்.

நாளை (4ந் தேதி) காலை 8.05 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சூலூர் விமானப்படை தளத்துக்கு செல்கிறார். அங்கு 11 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் 11.10 மணிக்கு  அங்கிருந்து புறப்பட்டு 11.45 மணிக்கு கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். மாலை 4.40 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவை விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு மாலை 5.35 மணிக்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா நடக்கும் இடத்துக்கு செல்கிறார்.மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஈஷா யோக மையத்தை பார்வையிடுகிறார். 112 அடி உயர ஆதி யோகி சிலை வளாகத்தில் செய்யப்பட்டுள்ள ஒளி ஒலி காட்சியை தொடங்கி வைக்கிறார்.

பின்னர் மகா சிவராத்திரியையொட்டி ஈஷா யோக மைய நிறுவனர் சத்குருவின் ஞானம், தியானம், ஆனந்தம் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி இரவு 7 மணிக்கு அங்கிருந்து கார் மூலம் கோவை வருகிறார். இரவில் அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.நாளை மறுநாள் 5ம் தேதி காலை 9.45 மணிக்கு காரில் புறப்பட்டு கோவை விமானம் நிலையத்துக்கு செல்லும் அவர் விமானம் மூலம் டில்லி செல்கிறார். ஜனாதிபதி கோவை வருகையையொட்டி ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகை, சூலூர் விமானப்படை தளம், ஈஷா யோகா மையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ramnath Govind ,Coimbatore ,events , Various show, Coimbatore, President Ramnath Govind
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...