×

பெண் குழந்தைகள்கடத்தல் அதிகரிப்பு: அரசின் மெத்தனம் தொடர்கிறது

இந்தியாவில் மிக லாபகரமான தொழில் எனக் கேட்டால்,  குழந்தைகள் கடத்தல் என பதில் வருகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகள் கடத்தல் என்கிறார்கள். எதற்காக இப்படி குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள்? கட்டாய உழைப்பில் ஈடுபடுத்த, பிச்சை எடுக்க வைக்க, பாலியல் சுரண்டல் செய்ய,  விபச்சாரத்தில் ஈடுபடுத்த, சிறு வயதிலேயே ஹார்மோன் சிகிச்சை மூலம் செயற்கை முறையில்  உருவத்திற்கு மாற்றுவது, கட்டாய திருமணம் செய்ய,  திருமண மோசடியில் ஈடுபடுத்த, குழந்தைளை ஆபாச செயல்களில் ஈடுபடுத்தி புகைப்படம், வீடியோ எடுப்பது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக என பல குற்றங்களுக்காக குழந்தைகள் கடத்தப்பபடுகிறார்கள். இதற்காக  இந்தியாவில்   நிமிடத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போவதாக சைல்டு லைன் அமைப்பு  குற்றம் சாட்டுகிறது.

வெளிநாட்டிற்கு கடத்தல்

மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பிளாட்பாரங்களில் வசிக்கும் பிள்ளைகள், அரசு மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோயில்கள், தெருக்களை குறிவைத்தே குழந்தை கடத்தல் நடக்கிறது. முறுக்கு கம்பெனி, போர்வெல், கண்ணாடி பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உடல் சார்ந்த தொழிலுக்காக இந்தியாவில் ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கு குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். தமிழகத்தில் சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற நகரங்களுக்கும் குழந்தைகள் அதிகமாக  கடத்தப்படுகின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து  உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக புகார்கள் உள்ளன.

உ.பி முதலிடம்

இந்திய அளவில் குழந்தை கடத்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது.  கடந்த 2016ல் குழந்தைகள் கடத்தல் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவு என இரண்டிலுமே 14 ஆயிரத்து 611 வழக்குகளுடன் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து 12 ஆயிரத்து 771 வழக்குகளுடன் மகாராஷ்டிரம் இரண்டாமிடத்திலும், 10 ஆயிரத்து 733 வழக்குகளுடன் மத்திய பிரதேசம் மூன்றாமிடத்திலும் உள்ளன. குழந்தை கடத்தலில் பெருநகரங்களில் டெல்லி முதலிடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும், பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளன.

விரிவான அறிக்கை தாக்கல்

குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, எத்தனை வழக்குகளில் புலன் விசாரணை நடந்து வருகிறது, எத்தனை குழந்தைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர், தலைமறைவு குற்றவாளிகள் எத்தனை பேர் என நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பினர். மேலும் குழந்தை கடத்தல் தொடர்பான வழக்குகளில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாமல் போன சுமார் 9 ஆயிரம் குழந்தைகளில் 688 பேர் இன்னும் தேடப்பட்டு வருவதாக தெரிவித்தது. அத்துடன் 2016ம் ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை காணாமல் போன 9,882 குழந்தைகளில் 9,1194 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள காணாமல் போன 688 குழந்தைகளை மாநில காவல்துறையும், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவும் தேடி வருவதாக கூறப்பட்டுள்ளது.

சட்டத்தின் கடமை

ஏழ்மை, வறுமை குழந்தைகள் கடத்தலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாதல், போதிய கல்வியின்மை, பாதுகாப்பு குறைபாடுகள் ஆகியவையும் குழந்தை கடத்தலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.சமுதாயத்தில் பலவீனமாக இருக்கும் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் சமூக அநீதிகளால் பாதிக்கப்படுவதிலிருந்தும் அனைத்து வகையானச் சுரண்டல்களிலிருந்துப் பாதுகாக்கப்பட வேண்டும் என  சட்டப்பிரிவு 46 கூறுகிறது. அனைத்து மனித உயிர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது சட்டத்தின் கடமை என்ற போது, குழந்தைகள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். அத்துடன் அதில் பெற்றோருக்கு உரிய பொறுப்பு உள்ளது

வறுமையின் காரணமாக...

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புப்பிரிவு கண்காணிப்பாளர் ஜோதி கூறுகையில், ‘‘பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகள் அதிகம் கடத்தப்படுகின்றனர். வறுமையின் காரணமாக பல இடங்களில் பெற்றோர் அனுமதியுடன் குழந்தைகள் வேலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காததுடன் உடல்ரீதியாக சித்ரவதை செய்யப்படுகின்றனர். குறிப்பாக, பெண் குழந்தைகள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். பெற்றோரின் அறியாமை மற்றும் வறுமை காரணமாக குழந்தை தொழிலாளராக அனுப்பப்படும் குழந்தைகள் பல இடங்களில் கடத்தப்படுகின்றனர். அதேபோல, ஆதரவற்றோர் விடுதிகளில் உள்ள குழந்தைகள் அதிகம் கடத்தப்படுகின்றனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் இவ்விடுதிகளை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட அளவில் மட்டுமின்றி தாலுகா அளவில் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் பணி விரிவுபடுத்தப்பட வேண்டும். அத்துடன் பள்ளி வாகனங்களில் இருந்து குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க அனைத்து பள்ளிகளின் ஓட்டுநர் குறித்த விபரங்களை காவல்துறை சேகரிக்கப்பதுடன் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு மாவட்டத்தில் இருந்து குழந்தை கடத்தப்படுவது பெரிய மனிதர்களின் தொடர்பு இல்லாமல் செய்ய முடியாது. இது பெரிய நெட்ஓர்க். அதை தடுக்க மாவட்ட அளவில் காவல்துறையில் தடுப்பு பிரிவு செயல்பட வேண்டும்,’’ என்கிறார்.

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
 
குழந்தைகள் பள்ளி, விளையாட்டு, உறவினர் வீடு என எங்கு சென்றாலும் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.  அத்துடன் அவர்களின் வயதுக்கு ஏற்ப சில விஷயங்களை கற்றுத் தர வேண்டியதும் அவசியம். குழந்தைகளின் உடல் குறித்த புரிதலை முதலில் அவர்களுக்கு உருவாக்க வேண்டும். அவர்களின் அனுமதியில்லாமல் பிறர் தொடுவதைத் தடுப்பதற்கான பயிற்சியை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். பெற்றோரைக் கேட்காமல் யாருடனுடன் தனியாக குழந்தைகளை வெளியே அனுப்புவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மனதில் நம்பிக்கையூட்டி எதையும் பார்த்து கலங்கக்கூடாது என்று தைரியத்தை அளிப்பதன் மூலமே அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அந்த கடமை பெற்றோர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் உள்ளது.

1 லட்சம் பேர் மாயம்

இந்தியாவில் 2016ம் ஆண்டில் மட்டும் 54 ஆயிரத்து 723 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். 2015ம் ஆண்டில் 41 ஆயிரத்து 893 குழந்தைகளும், 2014ம் ஆண்டில் 37 ஆயிரத்து 854 குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர்.  குழந்தை கடத்தல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகமே கவலை தெரிவித்துள்ளது. அகில இந்திய அளவில் 2016ம் ஆண்டு 70 ஆயிரத்து 394 பெண் குழந்தைகள், சிறுமிகள், 41 ஆயிரத்து 175 ஆண் குழந்தைகள் என மொத்தம் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 569 குழந்தைகள் கடந்த 2016ம் ஆண்டு மாயமானதாக  வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 34 ஆயிரத்து 814 பெண் குழந்தைகள், சிறுமிகள் உள்பட 55 ஆயிரத்து 625 குழந்தைகள்  மீட்கப்படவில்லை என்பது தான் அதிர்ச்சிகரமான செய்தி.கடந்த 2016ம் ஆண்டு நிலவரப்படி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1 லட்சத்து 6 ஆயிரத்து 958 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2015ம் ஆண்டில் 94 ஆயிரத்து 172 வழக்குகளாக இருந்தது. இதன் மூலம் ஓர் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சரியாக 13.6 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் குழந்தை  கடத்தல், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் மற்றும், சிறுவர் நீதி சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசுக்கு கொட்டு

குழந்தைகளின் கடத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர் ஆகிய பிரச்னைகளைக் களைய காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றுவதும், புதிய சட்டங்களை உருவாக்குவதும் மிக அவசியம். ஆனால், அரசுகள் அதற்கு தயாராக இல்லை. குழந்தை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே கொட்டு வைத்துள்ளது. சென்னை வால்டாக்ஸ் சாலையோரத்தில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை மர்மக்கும்பல் கடத்திச் சென்றது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இந்த வழக்கை கடந்த 2016ம் ஆண்டு விசாரித்த நீதிமன்றம், இச்சம்பவத்தில் போலீசாரின் செயலுக்கு கண்டனத்தை தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைப் படித்து பார்த்த நீதிபதிகள், இந்த அறிக்கை மற்றும் போலீசாரின் நடவடிக்கைகளில் திருப்தியில்லை என்றும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு முறையாக வழங்கப்படவில்லை. மேலும், புலன் விசாரணையிலும் தீவிரம் காட்டவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.

வைரலாகும் புரளி

குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோக்களால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மராட்டியம், டெல்லி போன்றவற்றில் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.  இந்த பதற்றத்தால் பல மாநிலங்களில்  25க்கும் மேற்பட்ட அப்பாவிகள் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  இதனால் நாடு முழுவதும் குழந்தை கடத்தல் பீதியை தடுத்து நிறுத்த சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் வதந்தியை தடுக்க தீவிர முயற்சி மேற்கொள்ளும்படி மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனாலும், குழந்தைகள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதால், அப்பாவி மக்கள் பலர் பொதுமக்களிடம் தாக்குதலுக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state , Increased, female child, raising, state, frustrated
× RELATED அப்போ வேண்டாம்… இப்போ ரெடியாம்… நடிகை...