×

டோனி - கேதார் பொறுப்பான ஆட்டம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா

ஐதராபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், டோனி - கேதார் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக கவாஜா, கேப்டன் பிஞ்ச் களமிறங்கினர். பார்மில் இல்லாத பிஞ்ச் 3 பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில், பூம்ரா வேகத்தில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார்.
கவாஜா - ஸ்டாய்னிஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்தது. ஸ்டாய்னிஸ் 37 ரன் எடுத்து (53 பந்து, 6 பவுண்டரி) கேதார் பந்துவீச்சில் கோஹ்லியிடம் பிடிபட்டார். அரை சதம் அடித்த கவாஜா (50 ரன், 76 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) குல்தீப் சுழலில் ஷங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹேண்ட்ஸ்கோம்ப் 19, டர்னர் 21 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.கிளென் மேக்ஸ்வெல் 40 ரன் எடுத்து (51 பந்து, 5 பவுண்டரி) ஷமி வேகத்தில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி - கோல்டர் நைல் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்தது. கோல்டர் நைல் 28 ரன் எடுத்து பூம்ரா வேகத்தில் கோஹ்லியிடம் பிடிபட, ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்தது. கேரி 36 ரன், கம்மின்ஸ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் ஷமி, பூம்ரா, குல்தீப் தலா 2, கேதார் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 237 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித், தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். தவான் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ரோகித் - கேப்டன் கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்தது.கோஹ்லி 44 ரன் (45 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), ரோகித் 37 ரன் (66 பந்து, 5 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினர். அம்பாதி ராயுடு 13 ரன் எடுத்து ஸ்மபா பந்துவீச்சில் கேரி வசம் பிடிபட்டார். இந்தியா 99 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், டோனி - கேதார் ஜோடி 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்ததுடன் வெற்றியையும் வசப்படுத்தி அசத்தினர். இந்தியா 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 240 ரன் எடுத்து வென்றது. டோனி 59 ரன் (72 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர், கேதார் 81 ரன்னுடன் (87 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேதார் ஜாதவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி நாக்பூரில் 5ம் தேதி நடைபெறுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tony - Kedar ,Aussie , Tony - Kedar , game, India's , Aussie
× RELATED நான் ரெடி தான்… கம்மின்ஸ் உற்சாகம்