×

அபிநந்தனிடம் கட்டாய வாக்குமூலம்

புதுடெல்லி: இந்திய விமானப்படை விமானி அபிநந்தனிடம் கட்டாய  வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது..பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், 60 மணி நேரத்திற்கு பின் நேற்று முன்தினம் இரவு விடுவிக்கப்பட்டார். பஞ்சாப் மாநிலம்,  அட்டாரி வாகா எல்லையில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு  இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இரவு 9.25 மணிக்குதான் ஒப்படைக்கப்பட்டார். அவரை வாகா எல்லையில் அபிநந்தனின் பெற்றோர், விமானப்படை மூத்த அதிகாரிகள்  வரவேற்றனர்.  இந்திய அதிகாரிகளிடம் அவரை ஒப்படைக்கும் முன்பு அவரிடம் பாகிஸ்தான் ராணுவம் வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்துள்ளது. இதனால்தான், 5 மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதத்திற்கு பின் அவர்  ஒப்படைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவம் அவரிடம் கட்டாய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 அந்த வீடியோ வாக்குமூலத்தில் பல இடங்களில் எடிட் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில்  வெட்டப்பட்டும் உள்ளதால் பாகிஸ்தான் ராணுவத்தின் வற்புறுத்தலின் பேரில் அவர் வாக்குமூலம் அளித்தது உறுதியாகி உள்ளது. பாகிஸ்தானுக்கு நற்பெயர் கிடைக்கும் வகையில் அந்த நாட்டை புகழ்ந்து பேசும்படி கூறி வீடியோ  பதிவு செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இரவு 8.30 மணிக்கு அந்த வீடியோ பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், அபிநந்தன்,` பாகிஸ்தான் வான்வெளியில் இலக்கை நோக்கி நான் பறந்தபோது என்னுடைய விமானம் சுட்டு  வீழ்த்தப்பட்டது. இதையடுத்து நான் பாரசூட் மூலம் குதித்து தப்பினேன். அங்கு கூடியிருந்த மக்களிடம் இருந்து என்னை காத்துக்கொள்ள துப்பாக்கியால் சுட்டபடி ஓடினேன். என்னை விரட்டி வந்த மக்களிடம் இருந்து பாகிஸ்தான்  ராணுவ அதிகாரிகள் இருவர் மீட்டனர். இதையடுத்து எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை அளித்தனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் என்னை நல்லவிதமாக  நடத்தினர்’ என தெரிவித்துள்ளார்.

மனரீதியாக சித்ரவதை
பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் காயம் அடைந்த நிலையில், கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் பாகிஸ்தான் ராணுவம் அவரை பிடித்து சென்றது போன்ற வீடியோ  தொடக்கத்தில் வெளியானது. பின்னர் வெளியான மற்றொரு வீடியோவில் விமானி அபிநந்தன் டீ குடிப்பது போன்றும், தன்னை பிடித்தவர்கள் நன்றாக கவனித்து கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும், அபிநந்தன்  பாரசூட்டில்  பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததால் உள்ளூர்வாசிகள்  தாக்கியதாகவும், தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்ட  அபிநந்தனை ஜெனிவா ஒப்பந்தப்படி நன்றாக கவனித்து கொண்டதாகவும் பாகிஸ்தான்  ராணுவ  அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், 60 மணி நேரம் பாகிஸ்தான் பிடியில் இருந்த அபிநந்தனை உடல் ரீதியாக துன்புறுத்தவில்லை என்றும் மனரீதியாக துன்புறுத்தியதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி  ஏஎன்ஐ ெசய்தி வெளியிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Abhinandan , Compulsory, confession, Abhinandan
× RELATED பாக். விமானத்தை சுட்டு வீழ்த்திய...