×

2019 மக்களவை தேர்தலிலும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் 3.10 கோடி பேர் பறந்தால்தான் வாக்களிக்க முடியும்

ஆன்லைன், தபால் ஓட்டுக்கு இந்த முறையும் வாய்ப்பு இல்லை

நாகர்கோவில்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க ஆன்லைன், தபால் ஓட்டு முறைகளை ஏற்படுத்தாததால் வரும் மக்களவை தேர்தலிலும் 3 கோடியே 10 லட்சம் பேர் வாக்களிப்பது சவாலாக மாறியுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் அங்கிருந்தபடியே வாக்களிக்க வேண்டும் என்றால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும். இதற்காக கடந்த 2015ம் ஆண்டு தேர்தல் ஆணையம் சட்ட முன்வரைவை மத்திய சட்ட அமைச்சத்துக்கு அனுப்பியது. அப்போது மத்திய அமைச்சரவை இதில் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் வி.பி.ஷம்ஷீர், லண்டனில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பு தலைவர் நாகேந்தர் சிந்தம் ஆகியோர் இது தொடர்பாக டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது உலகம் முழுவதும் உள்ள 3.10 கோடிக்கும் அதிகமான வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். இதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேறிய வேளையில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்தநிலையில்தான் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் வழி அல்லது மின்னணு வழியில் வாக்களிக்க செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரும் திட்டமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தல்களில் வாக்களிக்கும் வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை மசோதா கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அமலாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுகுறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இடம்பெறவில்லை. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக புள்ளி விவரத்தின்படி வெளிநாடுகளில் சுமார் 3.10 கோடி இந்தியர்கள் வாழ்கின்றனர். இதன் வாயிலாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் சார்பில் இந்தியாவில் வாக்களிக்க ஒருவரை நியமிக்கலாம் எனவும், இதற்காக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒருமுறை இந்தியாவிற்கு வந்து தங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா விவரங்களை தம் தொகுதிகளில் பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்திய ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கான ஓட்டுரிமையிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் வழி, மின்னணு வழியில் வாக்களிக்க வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரும் திட்டமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் வரும் பாராளுமன்ற தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 3.10 கோடி பேர் வெளிநாடுகளில் இருந்தவாறே தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இவர்கள் இந்தியா வந்து நேரடியாக வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க மட்டுமே வழிவகைகள் உள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Lok Sabha ,NRIs , Overseas Indians, 2019 Lok Sabha election,
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...