×

தூங்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் துயில் களைவார்களா? சுகாதாரமற்ற இட்லி, தோசை மாவு விற்பனை

* ஆவி பறக்க இட்லி சாப்பிடும் அப்பாவிகள் ஆவியாகும் அபாயம்

சுகாதாரமற்ற நிலையில் தயாரிக்கப்பட்டு பாலித்தீன் கவர்களில் விற்கப்படும் இட்லி, தோசை மாவில் கலப்படம் உள்ளதால், ஆவி பறக்க இட்லி சாப்பிடும் அப்பாவிகள் ஆவியாகும் அபாயம் உள்ளது. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்னிந்தியர்களின் உணவில் இட்லிக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. பண்டிகை நாளில் தயாரிக்கப்படும் உணவாக இருந்து, கிரைண்டர் வருகைக்கு பிறகு அன்றாட உணவாகி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது. சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.

அரை கிலோ பாக்கெட் மாவு ரூ.30. பாக்கெட்டுகளில் விற்கப்படும் மாவுகளில் தயாரிக்கப்பட்ட தேதி, எத்தனை நாள் வரை பயன்படுத்தலாம். தயாரிக்கப்பட்ட இடம், தரம், சேர்க்கப்பட்டுள்ள அரிசி, உளுந்து விகிதம் என அனைத்தும் பாக்கெட்டில் குறிக்கப்பட வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்படும் மாவு தரமான உளுந்து, அரிசி, அரைக்கப்படும் கிரைண்டர், பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என நிபந்தனை. ஆனால், இந்த நிபந்தனைகளை பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இம்மாவில் ஆப்ப சோடா, ஈஸ்ட், பிளீச்சிங் பவுடர், ஒயிட் கெமிக்கல்ஸ் போன்றவை கலப்படம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இவ்வாறு கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு தண்ணீரால் பரவும் நோய்கள், வயிற்று வலி உட்பட பல்வேறு பாதிப்புகள் வரும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். குடிசை தொழில் போல் பெருகி வரும் மாவு விற்பனை தொழிலை முறைப்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தி சுகாதாரமான முறையில் தரமான மாவு பொது மக்களுக்கு கிடைக்க அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.

சுகாதாரமற்ற இட்லி, தோசை மாவு பயன்பாடு குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘மாவு தயாரிக்க நல்ல தண்ணீர் அல்லது மினரல் வாட்டர் பயன்படுத்தப்படுவது அவசியம். மாவு தயாரிக்கும் அனைவரும் தரமான அரிசி, உளுந்துகளை பயன்படுத்துகிறார்கள் என சொல்ல முடியாது. மாவு வெண்மையாக, பஞ்சு போல் இருப்பதற்காக சிறிதளவு சுண்ணாம்பு, பிளீச்சிங் லிக்குவிட் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. அரைத்தவுடன் புளிப்பதற்கு ஈஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. மாவு தயாரிக்கப்படும் கிரைண்டர், இடம் சுகாதாரமான முறையில் இருக்கிறதா? என்பதும் கேள்விக்குறியே. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவுகளை உண்ணும் போது உடனடியாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கும். கொஞ்சம், கொஞ்சமாக எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். சரியான முறையில் அரிசி, உளுந்து கழுவப்படாமல் இருந்தால் நீரில் பரவும் நோய்களான டைப்பாய்டு, காலரா, போன்றவை வர வாய்ப்புள்ளது. தொடர்ந்து பயன்படுத்தும் போது தோல் சம்மந்தமான வியாதிகள், குடல் பாதிப்புகள், உணவு விஷமாதல் ஏற்படும். செரிமான கோளாறு, அடிக்கடி வயிறு வலி, வயிறு எரிச்சல் வரும்.

பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்யப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படுவதாலும் பாதிப்புகள் ஏற்படலாம். வெளியில் மாவு வாங்குவதை தவிர்ப்பதன் மூலமே இம்மாதிரியான நோய்களை தடுக்க இயலும்‘ என்றார். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் உணவு பொருட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இட்லி, தோசை மாவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இத்தொழிலில் உள்ளனர். இதில், சிலர் மட்டும் உணவுப்பொருள் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் முறையாக பதிவு செய்துள்ளனர். அவர்களின் தயாரிப்பு இடம், தயாரிப்பு முறை, பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தையும் ஆய்வு செய்து அதிகாரிகள் உரிமம் வழங்கியுள்ளனர். ஆனால், வீடுகளில் மாவு தயாரிப்பவர்கள் யாரும் உரிமம் பெற முன்வருவது இல்லை. எனவே, ஆவி பறக்கும் இட்லி அப்பாவிகளை ஆவியாக்குவதற்கு முன், உரிமம் பெறாமல் கடைகளில் விற்கப்படும் இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில், கலப்படம், சுகாதாரமின்மை ஆகியவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

* அரை கிலோ பாக்கெட் மாவு ரூ.30. பாக்கெட்டுகளில் விற்கப்படும் மாவுகளில் தயாரிக்கப்பட்ட தேதி, பயன்படுத்துவதற்கான நாட்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
* தயாரிக்கப்பட்ட இடம், தரம், சேர்க்கப்பட்டுள்ள அரிசி, உளுந்து விகிதம் என அனைத்தும் பாக்கெட்டில் குறிக்கப்பட வேண்டும்.
* இட்லி, தோசை மாவில் ஆப்ப சோடா, ஈஸ்ட், பிளீச்சிங் பவுடர், ஒயிட் கெமிக்கல்ஸ் போன்றவை கலப்படம் செய்யப்படுவதாக  குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

எவ்வளவு செலவாகும்?
வீடுகளில் மாவு விற்பனை செய்யும் பெண் ஒருவர் கூறுகையில், ‘’ஒரு படி ரேஷன் அரிசிக்கு, கால் கிலோ ரேஷன் உளுந்து பயன்படுத்துவோம். ஒரு டீஸ்பூன் வெந்தயம் போடுவோம். ரேஷன் அரிசி இலவசமாக கிடைக்கிறது. உளுந்து ஒரு கிலோ ரூ.80 தான். அப்போது கால் கிலோ உளுந்து ரூ.20.
இதனை அரைக்க ஒரு யூனிட் கரன்ட் தான் செலவாகும். ஆக மொத்தம் ஒரு படி மாவு அரைக்க தயாரிப்பு செலவு ரூ.25 தான். மாவு பஞ்சு போல் சாப்ட்டாக வருவதற்கு கொஞ்சம் ஆப்ப சோடா சேர்ப்போம். ரேஷன் பச்சரிசி பாதி, ரேஷன் புழுங்கல் அரிசி பாதி சேர்த்தால் மாவு வெள்ளையாக இருக்கும். நன்றாக கழுவினால் வாடை இருக்காது. ஒரு நாளைக்கு 5 படி அரைத்து விற்றால் அதிகபட்சம் ரூ.400 லாபம் கிடைக்கும்‘ என்றார்.

புகார் அளிக்க
உணவு பாதுகாப்பு துறை ஆணையர்
தொலைபேசி: 9444042322
டிஎம்எஸ், சென்னை - 600 006

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Food Safety Officers , Food Safety Officers, Unhealthy idly, dosa
× RELATED திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 2...