×

டெல்லி ராணுவ மருத்துவமனையில் உள்ள அபிநந்தனை சந்தித்து மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் நலம் விசாரிப்பு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இந்திய விமானி அபிநந்தனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசியுள்ளார். கடந்த 14ம் தேதி புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக கடந்த மாதம் 26ம் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாமின் நிலைகள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின்போது அபிநந்தன் என்ற விமான ஓட்டிய மிக்ரக விமானத்தை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இதில் விமானத்திலிருந்து பாதுகாப்பாக பாராசூட் மூலம் வெளியே பறந்த அபிநந்தனை, பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அதன்பின் சர்வதேச அழுத்தம், இந்தியாவின் நெருக்கடிகள் ஆகியவற்றால், 3 நாட்களுக்கு பின் அபிநந்தனை நேற்றிரவு வாகா எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.

மாலை 4 மணிக்கு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரவு 9 மணிக்குத்தான் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார். இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படும் முன், அவரிடம் பாகிஸ்தான் ராணுவம் வீடியோ மூலம் வாக்குமூலம் பதிவு செய்து அதை வெளியிட்டது. அந்த வீடியோவில் உள்ள காட்சிகள் பல முறை ‘எடிட்’ செய்யப்பட்டும், ‘கட்’ செய்யப்பட்டும் இருக்கிறது. இதனால், இந்த வீடியோவில் அபிநந்தன் பேசியதில், பாகிஸ்தான் ராணுவத்தினரின் வற்புறுத்தலின் பெயரில் பேசினாரா, அல்லது இயல்பாக பேசினாரா என்பது தெளிவாக அறிய முடியவில்லை. மேலும், ‘பாகிஸ்தான் ராணுவத்துக்கு நல்லபெயர் கிடைக்க வேண்டும்’ என்பதற்காக புகழந்து பேசக் கூறி நிர்பந்திக்கப்பட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு அந்த வீடியோவை பாகிஸ்தான் அரசு உள்ளூர் ஊடங்களில் வெளியானது. அந்த வீடியோவில், எவ்வாறு இந்திய விமானி பிடிபட்டார் என்று தலைப்பில் இருந்தது. இந்த வீடியோ பதிவு செய்வதன் காரணமாகத்தான் அபிநந்தன் ஒப்படைப்பிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படும் முன்பு, பாகிஸ்தான் வீடியோவை பதிவு செய்ததாகவும், அதில் பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசும்படியாக அவருக்கு நெருக்கடி கொடுத்து, இந்த வீடியோ எடுக்கப்பட்டதாவும் தெரிகிறது. இந்த வீடியோ எடுக்கப்பட்ட காரணத்தினால் தான் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்க, தாமதம் ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது. மேலும், அந்த வீடியோவில் சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்களில் ‘எடிட்’ செய்யப்பட்டு பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசுவது மட்டுமே இடம் பெற்றுள்ளதால், அபிநந்தனின் கட்டாய வாக்குமூலம் பெறப்பட்டது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து. இந்திய அதிகாரிகள் அபிநந்தனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு அழைத்து வரப்பட்ட அபிநந்தனுக்கு இன்று காலை 11.30 மணிக்கு டெல்லி துவாலக்குவான் ராணுவ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராணுவ மருத்துவமனையில் உள்ள அபிநந்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். நிர்மலா சீதாராமனுடன் உயர் அதிகாரிகளும் அபிநந்தனை சந்தித்து பேசினர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmala Sitharaaman ,Abhinanthan ,Delhi Army Hospital , Delhi, Military Hospital, Abhinanthan, Central Minister Nirmala Sitaraaman, well
× RELATED டெல்லி ராணுவ மருத்துவமனையில்...