×

காரமடை, மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு மூன்றாவது பாதை

* ரூ.48.99 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவக்கம்

மஞ்சூர்  :  ஊட்டியில் இருந்து மஞ்சூர் வழியாக கோவைக்கு மூன்றாவது பாதை அமைக்கும் ரூ.48.99 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று துவக்கி வைத்தார். ஊட்டியில் இருந்து மஞ்சூர், கெத்தை, முள்ளி, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு மூன்றாவது மாற்றுபாதை அமைக்கப்படும் என கடந்த 2011ம் ஆண்டு தமிழக சட்டமன்ற கூட்டத்தில் 110விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு பிறகு, தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில் மூன்றாவது மாற்றுபாதை திட்டத்தின் கீழ் மஞ்சூர்-கோவை சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மஞ்சூர் முதல் பெரும்பள்ளம் வரை சுமார் 22 கி.மீ., சாலை சீரமைக்க ரூ.26.99 கோடி, பெரும்பள்ளத்தில் இருந்து வெள்ளியங்காடு வரையிலான 23 கி.மீ தூர சாலையை சீரமைக்க ரூ.22 கோடி என மொத்தம் ரூ.48.98 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

 நீலகிரி மற்றும் கோவை மாவட்ட தேசிய நெடுஞ்சாலைதுறைகளின் சார்பில் இருபிரிவுகளாக மேற்கொள்ளப்படும் சாலை சீரமைப்பு பணிகளுக்கான டெண்டர் கடந்த மாதம் விடப்பட்ட நிலையில் காரமடையில் இருந்து பெரும்பள்ளம் வரையிலான சாலை சீரமைப்பு பணிகளுக்கான பூமி பூஜை கடந்த இரு தினங்களுக்கு முன் போடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று மஞ்சூர் முதல் பெரும்பள்ளம் வரையிலான சாலை பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டது. மஞ்சூர் மின்வாரிய மேல்முகாம் பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பணிகளை துவக்கி வைத்தார்.

இதில்  கோபாலகிருஷ்ணன் எம்,பி., தேசிய நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ், நெடுஞ்சாலைதுறை மாவட்ட கோட்டப்பொறியாளர் விஸ்வநாதன், குந்தா தாசில்தார் ஆனந்தி, தேசிய நெடுஞ்சாலைதுறை உதவி கோட்டப்பொறியாளர் சாமியப்பன், உதவி பொறியாளர்கள் பாலசந்தர், சுரேஷ், குந்தா மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரகு, சாலை ஆய்வாளர் சுரேஷ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து காரமடை, மேட்டுப்பாளையம், கோவை பகுதிகளை இணைக்கும் முக்கிய மூன்றாவது பாதையாக இந்த சாலை அமைந்துள்ளது. மேலும் காரமடையில் இருந்து மஞ்சூர், குந்தா, அப்பர்பவானி, தாய்சோலா பகுதிகளுக்கு செல்லவும் இந்த சாலை முக்கிய பங்கு வகிக்கிறது. மத்திய சாலை நிதித்திட்டத்தின் கீழ் இந்த சாலையை மேம்படுத்த ரூ.48.99 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதன் மூலம் ஒருவழிசாலை இருவழி சாலையாக அகலப்படுத்தப்படும்.

மேலும் கொண்டைஊசி வளைவுகள் அகலப்படுத்தபடும்.  தேவையான இடங்களில் தடுப்புசுவர்கள், மழைநீர் வடிகால்  கால்வாய் அமைக்கப்படும். இதன் மூலம் இந்த சாலையில் பாதுகாப்பான பயணம் உறுதிபடுத்தும். மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சியடைய இந்த பெரிதும் உதவுவதோடு, நீலகிரி மாவட்டத்தின் மூன்றாவது மாற்றுபாதையாக செயல்படும். இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். ஊட்டியில் இருந்து மஞ்சூர் வழியாக கோவைக்கு மூன்றாவது மாற்றுபாதைக்கான பணிகள் துவக்கப்பட்டதால், மாவட்ட மக்களின் நீண்ட கால போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karamadai ,Manchur , Ooty ,kaaramadai ,manjur, new way, Hairpin pend
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.1.17 லட்சம் சிக்கியது