×

இந்தியாவிடம் ஒப்படைக்கும் முன் பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்த பேச நிர்பந்திக்கப்பட்டாரா அபிநந்தன்?

புதுடெல்லி: அபிநந்தனை ஒப்படைக்கும் முன்பு அவரிடம் பாகிஸ்தான் ராணுவம் வீடியோ பதிவு செய்ததாகவும், அதனால் தான் அவர் ஒப்படைக்கப்பட காலதாமதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பஸ் மீது, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதி அடில் அகமது நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு தக்க நேரத்தில் பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த 26ம் தேதி அதிகாலை குண்டுகள் வீசி தகர்த்தன.

இந்த தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக, பாகிஸ்தான் போர் விமானங்கள் காஷ்மீர் பகுதிக்குள் கடந்த 27ம் தேதி ஊடுருவின. இவற்றை இந்திய போர் விமானங்கள் வழி மறித்து விரட்டின. அப்போது, இந்தியாவின் மிக்-21 போர் விமானத்தை இயக்கிய சென்னையை சேர்ந்த விமானி அபிநந்தன், பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து விரட்டிச் சென்று தாக்கினார். இதில், ஒரு விமானம் தகர்க்கப்பட்டது. அதே நேரம், பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் அபிநந்தன் சென்ற விமானமும் சுடப்பட்டது. இதையடுத்து, பாராசூட் மூலமாக குதித்த அபிநந்தன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இறங்கினார்.

அவரை அப்பகுதி மக்கள் பிடித்து தாக்கினர். பின்னர், ராணுவத்திடம் ஒப்படைத்தனர். இந்திய விமானியை போர் விதிமுறைகள்படி மரியாதையாக நடத்த வேண்டும் எனவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியது. பல தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால், அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் அறிவித்தார்.

‘பதற்றத்தை தணிப்பதற்காக நல்லெண்ண அடிப்படையில், அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்படுவார்’ என்றார் அவர். இதனையடுத்து விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அபிநந்தனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் ஏராளமான மக்கள் மேளங்களுடனும், தேசியக் கொடியுடனும், மாலைகளுடனும் குவிந்தனர். அப்போது அபிநந்தனை விடுவிக்கும் நேரத்தை பாகிஸ்தான் அதிகாரிகள் 2 முறை மாற்றினர். இறுதியில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் விடுவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.

இரவு 9.15 மணியளவில் அபிநந்தனை, பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய விமானப்படை அதிகாரிகள் இருவரிடம் ஒப்படைத்தனர். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவர் டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் இந்நிலையில் ஒப்படைக்கப்படும் முன்பு அபிநந்தனிடம் பாகிஸ்தான் வீடியோவை பதிவு செய்ததாகவும், அதில் பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசும்படியாக அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் 15 முறை எடிட் செய்து அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : army ,Pakistan ,India , India, Pakistan, Pilot, Abhinandan, Wagah border,
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...