×

வாகாவில் குவிந்த மக்கள்

வாகா எல்லையில் நேற்று மாலை அபிநந்தன் ஒப்படைக்கப்படுவார் என தகவல் வெளியானதும். வாகா எல்லை அமைந்துள்ள பஞ்சாப் மாநிலத்தின் அட்டாரி பகுதியில் ஏராளமான மக்கள் மேள தாளத்துடனும், தேசியக் கொடியுடனும் குவிந்தனர். தேசப் பக்தி பாடல்களை பாடி, ‘பாரத் மாதா கி ஜே’ கோஷம் எழுப்பினர். சீக்கிய இளைஞர் ஒருவர் மாலையுடன் வந்திருந்தார். ‘‘அனுமதி வழங்கப்பட்டால், அபிநந்தனுக்கு நான் மாலையிடுவேன்’’ என அவர் கூறினார். ‘‘தீவிரவாதத்தை தூண்டுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்’’ என இளைஞர்கள் கோஷம் எழுப்பினர்.

நாடு திரும்பியதில் மகிழ்ச்சி
வாகா எல்லையில் விமானப்படை துணை மார்ஷல் ஆர்.ஜி.கே.கபூர் தலைமையிலான அதிகாரிகள், அபிநந்தனை வரவேற்றனர். அப்போது கபூர் அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தான் பிடியில் அபிநந்தன் 3 நாட்கள் இருந்துள்ளார். அப்போது அவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதனால், அவருக்கு விரிவான மருத்துவ பரிசோதனை தேவைப்படுகிறது’’ என்றார். அருகில் இருந்த அபிநந்தனிடம் நிருபர்கள் கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர், ‘‘நாடு திரும்பியதில் மகிழ்ச்சி’’ என்று மட்டும் பதிலளித்தார்.

அபிநந்தனை வாகா எல்லையில் நேற்று மாலை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் முன், அவரிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் வீடியோ வாக்குமூலம் பதிவு செய்தனர். இது பாகிஸ்தான் டி.வி சேனல்களில் நேற்று இரவு 8.30க்கு வெளியிடப்பட்டது. அதில் அபிநந்தன் கூறுகையில், ‘‘இலக்கை தாக்குவதற்காக நான் பாகிஸ்தான் வான் எல்லை பகுதியில் நுழைந்தேன். ஆனால் எனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. மக்களிடம் இருந்து என்னை பாகிஸ்தான் ராணுவத்தினர் காப்பாற்றினர். பாகிஸ்தான் ராணுவம் கண்ணியமாக நடந்து கொண்டது என்னை கவர்ந்தது’’ என்று கூறுகிறார்.

விடுதலையை தடுக்க வழக்கு
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை குறைக்கவும், இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கும் முதல் நடவடிக்கையாக அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் முடிவு செய்தார். இந்நிலையில், அபிநந்தன் விடுதலையை தடுத்து நிறுத்தக் கோரி பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாமபாத் உயர் நீதிமன்றத்தில் நேற்று அவசரமாக வழக்கு தொடர்ந்தார். அதில், ‘இந்திய விமானப்படை பைலட்டை ஒப்படைக்கும் இம்ரான்கான் அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். பாகிஸ்தானில் குண்டு வீசுவதற்காக, இந்திய பைலட் பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி பறந்து வந்துள்ளார். அவர் செய்த குற்றத்துக்கு அவர் இங்கு விசாரணையை சந்திக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதை தள்ளுபடி செய்தது.

போர் கைதி
இந்தியாவிடம் அபிநந்தனை ஒப்படைத்த பிறகு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அவரை ‘போர் கைதி’ என குறிப்பிட்டு இருந்தது. அது வெளியிட்ட அறிக்கையில், ‘அபிநந்தன் எங்கள் நாட்டில் போர் கைதியாக இருந்தபோது, சர்வதேச விதிமுறைகளின்படி கவுரவத்துடன் நடத்தப்பட்டார். பாகிஸ்தானிடம் பிடிப்பட்ட அவர், இந்தியாவிடம் இன்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்’ என்று கூறப்பட்டுள்ளது.

விமானத்தில் எழுந்து நின்று மரியாதை
அபிநந்தன் விடுவிக்கப்படுகிறார் என்ற தகவல் கிடைத்ததும், அவரது தந்தை வர்தாமன், தாயார் டாக்டர் ஷோபா மற்றும் குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றனர். அப்போது, அவர்களை கண்டதும் பயணிகள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். நேற்று அதிகாலை விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய பின், அதில் வந்த பயணிகள் யாரும், இருக்கையை விட்டு எழுந்து தங்கள் உடமைகளை எடுக்க போட்டி போடவில்லை. முதலில் அபிநந்தன் பெற்றோர் செல்ல வழிவிட்டு, கைதட்டி பாராட்டு தெரிவித்து வழி அனுப்பினர். அபிநந்தன் பெற்றோரும் தலையசைத்து நன்றி தெரிவித்து விமானத்தை விட்டு இறங்கினர். அதன்பின் அவர்கள் அமிர்தசரஸ் புறப்பட்டு சென்றனர்.  

தாத்தா முதல் பேரன் வரைமிக்-21 குடும்பம்
பாகிஸ்தான் போர் விமானங்கள் காஷ்மீரில் கடந்த 27ம் தேதி காலை ஊடுருவியபோது, அவற்றை சுட்டு வீழ்த்துவதற்காக மிக்-21 ைபசன் ரக விமானத்தில் புறப்பட்டார் விமானப்படை பைலட் விங் கமாண்டர் அபிநந்தன். பாகிஸ்தான் எல்லையில் அந்நாட்டின் எப்-16 ரக விமானத்தை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தினார். அதன்பின் இவரது விமானம், பாகிஸ்தான் விமான தாக்குலுக்கு ஆளானது. பாராசூட் மூலம் பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கிய அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். இவரது குடும்பம் பற்றி விமானப்படையின் ஒய்வு பெற்ற அதிகாரி விங் கமாண்டர் பிரகாஷ் நவேல் (66) கூறியதாவது: அபிநந்தன் குடும்பம் 3 தலைமுறைகளாக விமானப்படையில் பணியாற்றுகின்றனர். இவரது தந்தை ஏர்மார்ஷல் (ஓய்வு) சிம்மகுட்டி வர்தாமன் விமானப்படையில் பயிற்சி பைலட்டாக இருந்து மிக்-21 ரக விமானத்தை இயக்கியவர்.

அபிநந்தனின் தாத்தாவும் விமானப்படையில் பணியாற்றியவர். நானும், வர்தாமனும் ஐதராபாத்தில் உள்ள ஹகிம்பேட் விமானப்படை தளத்தின் பயிற்சி பிரிவில் பணியாற்றினோம். தாம்பரம் விமானப்படை தளத்திலும் வர்தமான் பணியாற்றினார். அவரது குடும்பம் எளிமையான குடும்பம். அவர்களின் வீட்டில் பலமுறை நாங்கள் சாப்பிட்டுள்ளோம். அபிநந்தனை நான் முதன் முதலில் 3 வயது குழந்தையாக பார்த்தேன். அவரது தாய் டாக்டர் ஷோபா மிகச் சிறந்த பெண்மணி. எனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது, அவர் எங்கள் வீட்டுக்கு வந்து ஊசி போடுவார். அபிநந்தன் சகோதரி ஆதித்தி பிரான்சில் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wagah , Wagah
× RELATED வாகா எல்லையில் ராணுவ வீரர்களை சந்தித்தார் அஜித்