×

தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் மதத்துக்கு எதிரானது அல்ல: இஸ்லாமிய மாநாட்டில் சுஷ்மா பேச்சு

அபுதாபி: ‘‘தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம், மதத்திற்கு எதிரானது அல்ல’’ என்று அபுதாபி மாநாட்டில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.  காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் 14ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான், இந்தியா எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், அபுதாபியில் 57 இஸ்லாமிய நாடுகள் பங்கேற்ற ஒத்துழைப்பு மாநாட்டில் முதல் முறையாக இந்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று பங்கேற்றார். இஸ்லாமிய ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய அமைச்சர் ஒருவர் பங்கேற்பது இதுவே முதல்முறை.  மாநாட்டில் சுஷ்மா பேசுகையில், ‘‘இந்திய பிரதமர் மோடி மற்றும் 130 கோடி இந்திய மக்களின் வாழ்த்துகளை சுமந்து கொண்டு வந்திருக்கிறேன். இதில், 18.5  கோடி முஸ்லிம் சகோதர சகோதரிகளின் வாழ்த்துகளும் அடங்கும்.

நீண்ட பாரம்பரியத்தை கொண்ட, அமைதி, அறிவு சார்ந்த சமூகத்தை கொண்ட மண்ணில் இருந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளேன். பல்வேறு மதங்களை கொண்ட இந்தியா, தற்போது உலகின் மிகப்பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாக மாறி வருகிறது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்பவர்கள். மிக சில முஸ்லிம்களே தீவிரவாத கொள்கை உடையவர்கள். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது எந்த மதத்திற்கும் எதிரான போராட்டம் அல்ல. இஸ்லாம் என்றாலே அமைதி என்பது பொருள். உலகத்தில் உள்ள ஒவ்வொரு மதமும் அமைதி, இரக்கம் மற்றும் சகோதரத்துவத்தை தான் போதிக்கிறது’’ என்றார்.

சுஷ்மாவை அழைத்ததால் பாகிஸ்தான் புறக்கணிப்பு
இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு மாநாட்டில் வரலாற்றில் முதல் முறையாக, மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று நேற்று இந்த மாநாட்டில் சுஷ்மா கலந்து கொண்டார். இவருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த அழைப்பை திரும்பப் பெறும்படி இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு மாநாட்டு கமிட்டியிடம் வலியுறுத்தியது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, இந்த மாநாட்டை புறக்கணித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fight ,Sushma ,Islamic Conference , Terrorism, Struggle, Islamic Conference, Sushma
× RELATED புதுடெல்லி மக்களவை தொகுதி பாஜ...