×

‘தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்காதே’பாக்.குக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

வாஷிங்டன்: தீவிரவாதிகளுக்கு புகலிடமும், நிதியுதவியும் கொடுப்பதை நிறுத்தும்படி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது. பாகிஸ்தானில் நேற்று முன்தினம் நடந்த நாடாளுமன்ற கூட்டு குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், நல்லெண்ண நடவடிக்கையாக இந்திய விமானி அபிநந்தன் வர்தமானை விடுவிப்பதாக கூறினார். இந்நிலையில், வாஷிங்டனில் பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்த அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர், ‘`இந்திய விமானியை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பதை வரவேற்கிறோம். அதேசமயம், இந்தியா, பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றத்தை தணிக்க, நேரடி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தும். தீவிரவாதிகளுக்கு தஞ்சம் கொடுப்பதை நிறுத்தவும் அவர்கள் நிதியுதவி பெறுவதை தடுக்கவும் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

அதேபோல், வியட்நாமில் அமெரிக்–்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையிலான 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பிறகு நாடு திரும்பு வழியில், மணிலாவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அளித்த பேட்டியில், ‘‘இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன். நேற்றிரவு கூட இருநாடுகளும் கூடுமான வரையில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள வலியுறுத்தினேன். அபாயம் அதிகரிப்பதை தடுக்க பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டு கொண்டேன். இதன் மூலம் இரு தரப்பிலும் பதற்றம் தணியும் என்று நம்புகிறேன். இதற்காக அமெரிக்கா கடுமையாக முயற்சித்து வருகிறது’’ என்றார். முன்னதாக, கடந்த இரண்டு நாட்களாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி ஆகியோருடன் மைக் பாம்பியோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : terrorists. ,US , 'Terrorists, the United States, Pakistan
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...