×

வெனிசுலா பிரச்னைைய தீர்க்கும் முயற்சி அமெரிக்கா தீர்மானத்தை ரஷ்யா, சீனா முறியடித்தன: வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தின

ஐ.நா: வெனிசுலா அரசியல் பிரச்னையை தீர்க்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சலில் அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தோற்கடித்தன. வெனிசுலாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஆட்சியில் நீடிப்பது செல்லாது எனக் கூறி எதிர்க்கட்சி தலைவராக உள்ள ஜூவான் குய்டோ தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துள்ளார். இவருக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என அமெரிக்கா உட்பட 50 க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவளிக்கின்றன. இந்நிைலையில், வெனிசுலாவில் புதிதாக அதிபர் தேர்தல் நடத்த வேண்டும், அங்கு தடையின்றி மனிதாபிமான உதவிகள் செல்ல வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.  இந்த தீர்மானம் சட்டப்படி செல்லுபடியாக வேண்டும் என்றால் 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பினர்களான இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வீட்டோ எதிர்ப்பு இல்லாமல், 9 ஓட்டுக்கள் பெற வேண்டும்.
அமெரிக்கா கொண்ட வந்த தீர்மானத்துக்கு தேவையான 9 ஓட்டுக்கள் கிடைத்தன. ஆனால், ரஷ்யாவும், சீனாவும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன.  
 
இதற்கு மாற்றாக ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்தில், ‘அமைதியான முறையில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். தற்போதைய அதிபர் மதுரோ அரசின் ஒப்புதலுடன் அனைத்துவிதமான மனிதாபிமான உதவிகள் செய்யப்பட வேண்டும்’ என கூறப்பட்டது.  இந்த தீர்மானத்துக்கு ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா, கினியா ஆகிய  4 நாடுகளின் ஒட்டுக்கள் மட்டுமே கிடைத்தன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட 7 நாடுகள் ரஷ்ய தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவும், ரஷ்யாவும் தாங்கள் கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த வெனிசுலாவுக்கான அமெரிக்க தூதர் எலியட் ஆப்ராம்ஸ், ‘‘அதிபர் மதுரோ மற்றும் அவரது ஆதரவாளர்களை ரஷ்யாவும், சீனாவும், தொடர்ந்து பாதுகாத்து வருவதால், வெனிசுலா மக்களின் கஷ்டங்கள் தொடர்கின்றன. அமெரிக்காவின் தீர்மானத்துக்கு பெரும்பான்மையான ஓட்டுக்கள் கிடைத்தது திருப்தி’’ என்றார்.

ரஷ்ய தூதர் வாசிலி நெபன்சியா கூறுகையில், ‘‘மக்கள் நலன் என்ற போர்வையில், ஆட்சி மாற்றத்துக்கான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. இதே போன்ற நடவடிக்கையை லிபியா, ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் விஷயத்தில் நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம்’’ என்றார். வெனிசுலா அதிபர் மதுரோ கூறுகையில், ‘‘வெனிசுலாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு அமெரிக்காவின் தடைகளே காரணம். என்னை ஆட்சியில் இருந்து நீக்குவதற்காக, மனிதாபிமான உதவிகளை அரசியல் உபகரணமாக அமெரிக்கா பயன்படுத்துகிறது’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Venezuela ,US ,China ,Russia , Venezuela, Problem, Resolution of the United States, Russia, China, Veto
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...