×

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு மட்டுமே வழங்கப்பட்டது அமெரிக்காவின் நிபந்தனையை மீறி எப்-16ஐ பயன்படுத்திய பாகிஸ்தான்

புதுடெல்லி: அமெரிக்கா கொடுத்த எப்-16 போர் விமானத்தை, இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் பயன்படுத்தவில்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால் பாகிஸ்தானின் பொய்யை இந்திய விமானப்படை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாதிகளை ஒழிக்கும் பணிக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடந்த 1980ம் ஆண்டுகளில் எப்-16 ரக போர் விமானங்களை வழங்கியது. அப்போதே அந்த ஒப்பந்தத்தில், ‘இந்த விமானங்களையும்,  இதில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களையும் சர்வதேச தீவிரவாத ஒழிப்பு பணிக்கு மட்டுமே பாகிஸ்தான் பயன்படுத்த வேண்டும், எந்த நாட்டுக்கும் எதிரான போர் நடவடிக்கைகளில் பயன்படுத்தக் கூடாது’ என நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால், இதை மீறி எப்-16 விமானங்களை பாகிஸ்தான் கடந்த 27ம் தேதி இந்தியாவுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் பயன்படுத்தியது. அதில் ஒரு விமானத்தை இந்திய விமானப்படையின் மிக் 21 ரக விமானம் சுட்டு வீழ்த்தியது. இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் எப்-16 ரக விமானத்தை பயன்படுத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் பாகிஸ்தான் எப்-16 விமானத்தை பயன்படுத்தவில்லை என அடித்துக் கூறியது. பாகிஸ்தானின் இந்த பொய்யை இந்திய விமானப்படை ஆதாரங்களுடன் நிருபித்துள்ளது. இது குறித்து விமானப்படை வைஸ் மார்ஷல் கபூர் கூறியதாவது:

கடந்த 27ம் தேதி காலை பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய ராணுவ நிலைகளில் தாக்குதல் நடந்த முயன்றன. அப்போது, விமானப்படை ரேடாரில் எப்-16 ரக போர் விமானங்களின் எலக்ட்ரானிக் சிக்னல்கள் பதிவாகியது. மேலும், காஷ்மீரின் ராஜோரி பகுதியில் ஏஐஎம்-120சி ரக ஏவுகணையின் பாகங்கள் அதன் எழுத்துக்களுடன் மீட்கப்பட்டன. விமானத்தில் இருந்து விமானத்தை தாக்க பயன்படுத்தப்படும் இந்த ரக ஏவுகணையை எப்-16 ரக போர் விமானங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்தியாவின் மிக்-21 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட படங்களை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது. அதில், இன்ஜினின் வெளிப்புற தகடின் படம் இருந்தது. அது மிக்-21 ரக விமானத்தின் பாகம் அல்ல. பாகிஸ்தான் பயன்படுத்திய எப்-16 ரக விமானத்தின் பாகம்.

பாகிஸ்தானின் எப்-16 ரக விமானம் சுடப்பட்டதும் அதன் பைலட் பாராசூட் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இறங்கினார். ஆனால், அவரையும் அடையாளம் காண முடியாமல், பாகிஸ்தான் மக்கள் தாக்கினர். அவரையும் இந்திய பைலட் என நினைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதனால்தான், முதலில் இரண்டு இந்திய பைலட்டுகள் தங்கள் பாதுகாப்பில் உள்ளனர் என பாகிஸ்தான் தவறாக அறிவித்தது. அதன் பிறகே, அதை மாற்றி ஒரு விமானி மட்டுமே சிக்கியுள்ளதாக தெரிவித்தது.
இவ்வாறு அவர் கூறினார். இந்திய போர் விமானங்கள் இடைமறித்து விரட்டியதால், காஷ்மீரில் உள்ள ராணுவ நிலைகள் மீது குண்டு வீச முடியாமல் பாகிஸ்தான் போர் விமானங்கள் திரும்பிச் செல்லும் வழியில் திறந்தவெளியில் குண்டுகளை வீசிவிட்டு சென்றன. உண்மை தகவல்களை மறைப்பதற்காக இந்த விஷயத்தில் பாகிஸ்தான் பொய் மேல் பொய் கூறி வருகிறது என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan ,US , Pakistan, F-16 to violate,US criteria
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்