×

சிறைபிடித்த 60 மணி நேரத்தில் விடுவித்தது பாகிஸ்தான் இந்தியா திரும்பினார் அபிநந்தன்

* வாகா எல்லையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வரவேற்பு

வாகா : பாகிஸ்தான் போர் விமானங்களை துரத்தி சென்று அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கிய விமானப்படையை சேர்ந்த சென்னை விமானி அபிநந்தன், நேற்றிரவு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். 60 மணி நேரத்துக்குப் பிறகு நாடு திரும்பிய அவரை வரவேற்க, வாகா எல்லையில் காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, ஆடல்,  பாடலுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்றிரவு 9.15 மணிக்கு வாகா எல்லை கதவுகள் திறக்கப்பட்டு, இந்திய ராணுவ அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.  காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பஸ் மீது, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதி அடில் அகமது நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு தக்க நேரத்தில் பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.  இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த 26ம் தேதி அதிகாலை குண்டுகள் வீசி தகர்த்தன. இந்த தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக, பாகிஸ்தான் போர் விமானங்கள் காஷ்மீர் பகுதிக்குள் கடந்த 27ம் தேதி ஊடுருவின. இவற்றை இந்திய போர் விமானங்கள் வழி மறித்து விரட்டின. அப்போது, இந்தியாவின் மிக்-21 போர் விமானத்தை இயக்கிய சென்னையை சேர்ந்த விமானி அபிநந்தன், பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து விரட்டிச் சென்று தாக்கினார்.

இதில், ஒரு விமானம் தகர்க்கப்பட்டது. அதே நேரம், பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் அபிநந்தன் சென்ற விமானமும் சுடப்பட்டது. இதையடுத்து, பாராசூட் மூலமாக குதித்த அபிநந்தன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இறங்கினார். அவரை அப்பகுதி மக்கள் பிடித்து தாக்கினர். பின்னர், ராணுவத்திடம் ஒப்படைத்தனர். இந்திய விமானியை போர் விதிமுறைகள்படி மரியாதையாக நடத்த வேண்டும் எனவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியது. இரு நாடுகள் கட்டுப்பாட்டுடன் நடந்து, பதற்றத்தை தணிக்க வேண்டும் என சர்வதேச நாடுகளும் வலியுறுத்தின. போர் பதற்றத்தை தணிக்க, இந்திய பிரதமர் மோடியுடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொலைபேசியில் பேச தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி தெரிவித்தார். இந்த விஷயத்தில், இந்தியாவை பொறுத்தவரையில் எந்த நிபந்தனையின்றி உடனடியாக அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என தீர்மானமாக தெரிவிக்கப்பட்டது. பல தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால், அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் அறிவித்தார். ‘பதற்றத்தை தணிப்பதற்காக நல்லெண்ண அடிப்படையில், அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்படுவார்’ என்றார் அவர்.

இதைத் தொடர்ந்து, அபிநந்தனை அழைத்து வருவதற்காக சிறப்பு விமானத்தை அனுப்புவதாக இந்தியா கூறியது. ஆனால், இந்த வேண்டுகோளை நிராகரித்த பாகிஸ்தான், அபிநந்தனை வாகா எல்லையில் ஒப்படைப்பதாக கூறியது. இதையடுத்து, நேற்று மாலை பாகிஸ்தான் ராணுவ வாகனத்தில் அபிநந்தன், வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார். அவரை வரவேற்க, அவரது பெற்றோர்கள்  மற்றும் குடும்பத்தினரும் சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம்  சென்றனர். பின் அங்கிருந்து அவர்கள் பஞ்சாப் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அபிநந்தனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் ஏராளமான மக்கள் மேளங்களுடனும், தேசியக் கொடியுடனும், மாலைகளுடனும் குவிந்தனர். அபிநந்தனை ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்காக  அட்டாரி-வாகா எல்லையில் நேற்று மாலை 6 மணியளவில் இரு நாட்டு தேசிய கொடிகள் இறக்கப்படும்போது, ராணுவ வீரர்கள் மேற்கொள்ளும் அணிவகுப்பு நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. நேற்று மாலை 4 மணியளவில் அபிநந்தன்  விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆவணங்களை பரிமாறிக் கொள்ளும் நடைமுறையில் சில பிரச்னைகள் எழுந்ததால், அவரை விடுவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

அபிநந்தனை விடுவிக்கும் நேரத்தை பாகிஸ்தான் அதிகாரிகள் 2 முறை மாற்றினர். இறுதியில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் விடுவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், மக்கள் சோர்வடையாமல் தேசபக்தி பாடல்களை பாடி, ‘பாரத் மாதா கி ஜே’  கோஷம் எழுப்பியபடி இரவு வரை உற்சாகமாக காத்திருந்தனர். வாகா எல்லையில் விமானப்படை அதிகாரிகள், எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள், பஞ்சாப் போலீசார் ஆகியோர் கவச வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சுடன் அபிநந்தன் வருகைக்காக காத்திருந்தனர். நேற்று இரவு 9.15 மணியளவில் அபிநந்தனை, பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய விமானப்படை அதிகாரிகள் இருவரிடம் ஒப்படைத்தனர். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவர் டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் அவரது பெற்றோர்களும் உடன் சென்றனர். பாகிஸ்தான் மக்கள் தாக்கியதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த 27ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தன், 3 நாட்களுக்குப் பிறகு தாய் நாடு வந்து சேர்ந்தார். அவர் பத்திரமாக நாடு திரும்பியதற்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் மகிழ்ச்சியும்,  வாழ்த்தும் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Abhinanthan ,release ,Pakistan ,prison , Abhinanthan returned , Pakistan ,release in prison 60 hours
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்