×

விமானி அபிநந்தன் நீண்ட தாமதத்திற்கு பிறகு இந்தியாவிடம் ஒப்படைப்பு

வாகா: பாகிஸ்தான் பிடியில் கடந்த 3 நாட்களாக இருந்த இந்திய விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்பட்டு மாலை 5 மணியளவில் வாகா எல்லை வந்தடைந்தார். சுமார் 4 மணி நேர தாமதத்திற்கு பிறகு பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை இந்திய வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் இந்திய விமான படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதில் பாகிஸ்தான் அதிகாரிகள் தொடாடந்து தாமதம் செய்து வந்தனர். அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் முன் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனைக்கு பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெற்றது. சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக அபிநந்தனை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில் மக்கள் கூட்டம் மாலை முதுல் அலைமோதியது. அபிநந்தனை வரவேற்க வந்த பொதுமக்கள் அனைவரும் தத்தம் கைகளில் இந்திய தேசியக்கொடிகளை உற்சாகமாக ஏந்தி நின்றனர்

லாகூரிலிருந்து கார் மூலமாக, அபிநந்தன், இந்திய எல்லையான வாகாவிற்கு அழைத்து வரப்பட்டார். அவர் வந்த டொயோட்டோ வகை கறுப்பு வண்ண காருக்கு முன்னும் பின்னும், பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் அணி வகுத்தன.அந்த கார்களில் ஜாமர்களும் பொருத்தப்பட்டிருந்தன. ரிமோட் குண்டுகளை பயன்படுத்தி தீவிரவாதிகள் அல்லது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்திவிட கூடாது என்பதற்காக இவ்வாறு ஜாமர் வசதி கொண்ட பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ அபிநந்தன் அழைத்து வரப்பட்டார். அபிநந்தன் அழைத்து வரப்பட்டதையொட்டி வரலாற்றில் முதல்முறையாக கொடிகளை இறக்கும் நிகழ்ச்சி வாகா எல்லையில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்ட அபிநந்தனை வரவேற்க விமானப்படையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் வந்ததால் வாகா எல்லையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது

முன்னதாக புல்வாமாவில் கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்புக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியா தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, கடந்த 26ம் தேதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் பதுங்கியுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. அப்போது விரட்டிச் சென்ற இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. அப்போது, விமானத்திலிருந்து பாராசூட் மூலம் தப்பிய இந்திய விமானி அபிநந்தன், பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். அவரை பாகிஸ்தான் வீரர்கள் பிடித்து சிறைவைத்தனர்.

பாகிஸ்தானிடம் பிடிப்பட்ட வீரர் அபிநந்தனை இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வர உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், உறவினர்கள், அவரது கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். மத்திய அரசும் இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச நடைமுறைகள் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் தூதரகத்திடம் அபிநந்தனை விடுவிப்பது தொடர்பாக வலியுறுத்தியது.

நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்துக்கு பின், ‘இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை உடனடியாக நாட்டுக்கு திருப்பி அனுப்பவே பாகிஸ்தானிடம் வலியுறுத்தினோம்; மேலும் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர், நேற்று மாலை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு பார்லிமென்டில், ‘இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நாளை (இன்று) விடுவிக்கப்படுவார். அவர் நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட உள்ளார்’ என்று தெரிவித்தார்.
அதையடுத்து, இன்று அபிநந்தனை வரவேற்க அவரது பெற்றோர் நேற்று மாலை சென்னையில் இருந்து டெல்லி விரைந்தனர். இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் அட்டாரி - வாகா எல்லையில் விமானி அபிநந்தன் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்ட்டது குறிப்பிடத்தக்கது.வாகா எல்லையில் காலை முதலே நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். இருநாட்டு ஊடகங்கள் மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களும் அங்கே முகாமிட்டு நேரடி ஒளிபரப்பு செய்தன. நாடு முழுவதும் அபிநந்தன் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pilot ,Abhinandan ,India ,delay , Abhinandan, Pakistan officials, delayed
× RELATED மக்கள் மத்தியில் நிலவும் மனநிலையைப்...