×

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அபிநந்தன் ஒப்படைப்பு; வாகா எல்லையில் வரவேற்க திரண்டுள்ள பொதுமக்கள்

இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் விமானப்படை வீரர் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார். இதன் பின்னர் அபிநந்தன் வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார். புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பழிதீர்க்கும் விதமாக, பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாமை இந்திய விமானப்படை போர் விமானங்கள் கடந்த 26ம் தேதி அதிகாலை குண்டுகள் வீசி தகர்த்தன. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை பாகிஸ்தான் போர் விமானங்கள் எல்லைக் கட்டுப்பாடு கோட்டை தாண்டி, இந்திய எல்லைக்குள் நுழைந்து ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டுவீச வந்தன.

சரியான நேரத்தில் இந்திய போர் விமானங்கள் இடைமறித்ததால், வெளிப்பகுதியில் குண்டுகளை வீசி பாகிஸ்தான் விமானங்கள் திரும்பின. அதில் எப்-16 விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது. அதேபோல, இந்தியாவின் மிக்-21 விமானத்தை பாகிஸ்தான் தாக்கியது. அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற சென்னையைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாராசூட் மூலம் குதித்து பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அடுத்தடுத்த நாட்களில் இரு நாட்டு போர் விமானங்கள் எல்லை தாண்டிய நிலையில், இந்திய விமானி கைதான விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த விஷயத்தில், இந்தியாவை பொறுத்தவரையில், எந்த நிபந்தனையின்றி உடனடியாக அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என தீர்மானமாக தெரிவிக்கப்பட்டது. அபிநந்தனை விடுவிக்க வேண்டுமென பாகிஸ்தான் அரசியல் தலைவர்களும் அந்நாட்டு அரசை வலியுறுத்தினர். பல்வேறு முனைகளிலிருந்து அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக, அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அபிநந்தனை ஒப்படைத்தனர். பின்னர் அங்கிருந்து வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்பட உள்ளார்.

அபிநந்தனின் உறவினர்கள்

வாகா எல்லைக்கு பிற்பகலில் வரும் அபிநந்தனை வரவேற்க அவரது பெற்றோர்கள், மனைவி, மற்றும் நெருங்கிய உறவினர்கள் வாகா எல்லைக்கு சென்றுள்ளனர்.

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்

மோடியிடம் வாகா செல்ல அம்ரீந்தர் சிங் அனுமதி கோரியிருந்தார். மோடி அனுமதி அளித்ததை அடுத்து அபிநந்தனை வரவேற்க பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் வாகா செல்கிறார்.

வாகா எல்லையில் மக்கள் கூட்டம்

பாகிஸ்தானில் இருந்து வரும் அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருகின்றனர். தேசிய கொடிகள் மற்றும் மலர் மாலைகளுடன் பல ஆயிரம் பேர் வாகாவில் திரண்டுள்ளனர். மேலும் மேளதாளம் முழங்க அபிநந்தனை வரவேற்க மக்கள் தயாராக உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Abhinandan ,Islamabad ,Indian Embassy ,border ,Wagah , India, Pakistan, Abhi Nandan, Wahab border, Chief Minister of Punjab, Amarinder Singh
× RELATED பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை:...