×

தென்னிந்தியாவின் முதல் நீண்ட இரும்பு மேம்பாலங்கள் மார்த்தாண்டம், பார்வதிபுரம் பாலங்களின் சிறப்பு தொழில்நுட்பம்

நாகர்கோவில் : தென்னிந்தியாவின் முதல் நீண்ட இரும்பு மேம்பாலங்களின் சிறப்பு தன்மை பற்றி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரத்தில் போக்குவரத்து  நெருக்கடியை தீர்க்கும் வகையில், முதல்முறையாக தென்னிந்தியாவில் நீண்ட இரும்பு மேம்பாலங்கள் ₹314.02 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் சிறப்பம்சங்கள் குறித்து, இதனை நிறுவிய எஸ்பிஎல் நிறுவன இயக்குநர் லெட்சுமணன், முதன்மை நிர்வாக அலுவலர் சரவணன், திட்ட இயக்குநர் அசோக் ஆனந்த், மண்டல பொறியாளர் ஜெகன்மோகன் ஆகியோர் கூறியதாவது: தென்னிந்தியாவில் முதல்முறையாக நீண்ட இரும்பு மேம்பாலங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.  மார்த்தாண்டம் மேம்பாலம், குழித்துறை  பாலம் அருகே தொடங்கி பம்மத்தில் முடிகிறது.  

இதில் சந்தை சாலையிலிருந்து, வந்து செல்லும் வாகனங்களுக்காக  காந்தி மைதானம் அருகே 100 மீட்டருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் அகலம் தடுப்பு சுவரையும் சேர்த்து 10 மீட்டராகும். சந்தை நோக்கி செல்லும் சாலை 6.5 மீட்டராகும்.  பார்வதிபுரம் பாலம், தடுப்பு சுவரையும் சேர்த்து 12 மீட்டராகும். இதில் கேபி சாலையில் அமைந்துள்ள பாலம் 6.5 மீட்டர் அகலம் உடையது. இருபாலங்களிலும் வடிகால் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பாலங்களில் ரோபோடிக் வெல்டிங் மூலம் மேம்பாலத்தின் வடிவத்திற்கு ஏற்ப இரும்பு தூண்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  

alignment=


தமிழகத்தில் முதல்முறையாக பாலத்தில் அனைத்து மின்சார கம்பிகளும் மேலே செல்லாமல், பெருநகரங்களுக்கு இணையாக நிலத்தடியில்  பாதுகாப்பாக  கேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது சிக்கலான மின்கம்பம் இல்லா அமைப்பாகும். மேம்பாலத்தின் தூண் மற்றும் தூணின் மீதுள்ள உத்திரங்களை தாங்கும்  T வடிலான பகுதிகள் மற்றும் உத்திரங்கள்  இ410 கிரேடு இரும்பால் உருவாக்கப்பட்டுள்ளது.  இது அரிப்பை எதிர்ப்பதுடன்,  இழுவிசை பண்புகளை உருவாக்குகிறது.  இ410 கிரேடு இரும்பு  650 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டது.  

40 வித்தியாசமான  அளவுள்ள ஸ்பெரிக்கல் பேரிங்குகள் மொத்தம் 1361 பேரிங்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதான்  பாலத்தின் எடையை தாங்குகிறது. பாலத்தின் வாகனங்களின் வேகம் மற்றும் எடைக்கு ஏற்ப அசையும் தன்மைக்கு இந்த பேரிங்குகளே காரணம். மேலும் பாலத்திற்கு நீண்ட ஆயுளை தரவும் முக்கிய காரணியாக உள்ளது.  ஐஐடியால் அங்கீகரிக்கப்பட்ட பெயிண்டிங் திட்டப்படி மேம்பால கட்டமைப்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெயிண்டிங் முறை ஆரம்பத்தில் ஸ்டீல் கிரிட் பிளாஸ்டிங் முறையை பயன்படுத்தி சாலையின் மேற்பரப்பு உருவாக்கப்பட்டது.

பின்னர் ஜிங் உடன் கூடிய அலுமினிய முலாம் பிரைமர் மற்றும் சீலருடன் 3 அடுக்குகளாக பூசப்பட்டுள்ளன.  கூடுதலாக மஸ்டிக் அஸ்பால்ட் மேம்பிரெயின்கள் தார் மற்றும் கான்கிரீட் பரப்பிற்கு இடையே சரியான நீர் காப்பாகவும், சிறந்த பிணைப்பிற்காகவும் வைக்கப்பட்டுள்ளது. சிலாப் கான்கிரீட்டிற்காக டெக் ஷீட்டுகள் பயன்படுத்தப்பட்டது. இது விரைவான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்தை உருவாக்க உதவும்.  மார்த்தாண்டத்தில் ரயில்வே சுரங்கப்பாதை பாதிக்காமல் இருக்கவும், பார்வதிபுரத்தில் அனந்தனாறு கால்வாய் பாதிக்காமல் இருக்கவும் ஒபிலிகேட்டரி ஸ்பான் என்ற அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : springs ,South India ,bridges ,Marthanda , Marthandam ,Parvatipuram ,special technology,steel Bridge , T shape
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: வாக்களிக்காமல் வெளியேறிய மமிதா பைஜு