×

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணிகள் மார்ச் இறுதியில் முடியும்

* ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்

திருத்துறைப்பூண்டி : திருவாரூர்-திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை வரையிலான அகல ரயில் பாதை பணிகள் இந்த மார்ச் மாத இறுதிக்குள்  நிறைவு பெறும் என தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி கூறினார். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி அகல ரயில்பாதை திட்டத்தில் காரைக்குடியிலிருந்து  திருவாரூர் வரையிலான 122 கி.மீ தூர மீட்டர்கேஜ் ரயில் பாதை அகல ரயில்  பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த வழித்தடத்தில்  ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. அதன்படி,  இந்த அகல ரயில் பாதை திட்டமானது மிகவும் தாமதமாக நடைபெற்று வந்த நிலையில் ஒரு  வழியாக காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரையிலான 72 கி.மீ. தூரத்திற்கு  பணிகள் முடிக்கப்பட்டு 2018 மார்ச் மாதம் ரயில் போக்குவரத்து  துவங்கப்பட்டது.

இந்நிலையில் பட்டுக்கோட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி  வழியாக திருவாரூர் வரையிலான இந்த திட்டமானது கிடப்பில் போடப்பட்ட நிலையில்  நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் இதற்கென ரூ.240 கோடி நிதி ஒதுக்கப்பட்டு  பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி பட்டுக்கோட்டையிலிருந்து  திருவாரூர் மாவட்டம், தில்லைவிளாகம் வரை ஒரு பிரிவாகவும்,  தில்லைவிளாகத்திலிருந்து திருத்துறைப்பூண்டி வரை ஒரு பிரிவாகவும்,  திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை மற்றொரு பிரிவாகவும்  என 3  பிரிவுகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திருவாரூரிலிருந்து  திருத்துறைப்பூண்டி வரை 26 கி.மீ. தூரத்தில் திருநெல்லிக்காவல் வரையில் 15  கி.மீ. தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ரயில் ஓட்டம்  கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து  துவங்கப்பட்டு திருநெல்லிக்காவல் வரை நடைபெற்றது. கடந்த ஆண்டு அக்டோபர் 26ம்  தேதி திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையிலான 25 கி.மீ. அகல ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்று ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.  

அதன் பிறகு ரயில்வே நிலைய கட்டிடங்கள், தடுப்பு சுவர்கள், பிளாட்பார்ம்கள்,  எலெக்ட்ரிகள் பணிகள், ரயில் நிலைய நடை மேம்பாலம், ரயில்வே கேட் அருகில்  சிக்னல் அமைக்கும் பணி போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று  வருகிறது. நடைபெற்று வரும் பணிகளை தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர்  உதயகுமார் ரெட்டி நேற்று திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை டவர்  வேன் மூலம் அகல ரயில் பாதையை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திருத்துறைப்பூண்டி  ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் ஒவ்வொரு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார்  ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், திருவாரூர்-திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை வரையிலான அகல ரயில் பாதை பணிகள் இந்த மார்ச் மாத இறுதிக்குள்  நிறைவு பெறும், எப்போது ரயில் சேவை தொடங்குவது என்று ரயில்வே போர்டுதான்  முடிவு செய்ய வேண்டும். திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி அகல ரயில்பாதை  பணி 2020 மார்ச்-ல் நிறைவு பெறும், அதன் பிறகு திருத்துறைப்பூண்டி-திருக்குவளை- வேளாங்கண்ணி அகல ரயில் பாதை பணி நிறைவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது தென்னக ரயில்வே கோட்ட கட்டுமான பிரிவு கிழக்கு கோட்ட பொறியாளர் பன்னீர்செல்வம் உடனிருந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruvarur-Tiruthuraipoondi ,Pattukottai , Thiruvarur,Thiruthiraipoondi,Pattukkottai ,Southern railway
× RELATED விஸ்வநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு