×

வருகிற மக்களவை தேர்தலில் பூத் சிலிப் வைத்து வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு

சென்னை: வருகிற மக்களவை தேர்தலில் பூத் சிலிப் வைத்து வாக்களிக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும், கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டையை காட்டாமல் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் காட்டி வாக்களிக்கலாம் என்ற விதி நடைமுறையில் இருந்தது. தற்போது, வருகிற மக்களவை தேர்தலில் பூத் சிலிப் வைத்து வாக்களிக்க அனுமதிக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் நேற்று அனுப்பியுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: இதற்கு முன் வாக்காளர்கள் போட்டோ ஒட்டிய பூத் சிலிப்பை அடையாளமாக காட்டி வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இதை தவறாக பயன்படுத்தி வாக்களிப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு அதிகளவில் புகார்கள் மற்றும் மனுக்களாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப் பாதுகாப்பானது இல்லை என்று கருதப்படுகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் 99 சதவீதம் பேரிடம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளது. இதை கருத்தில் கொண்டு வருகிற மக்களவை தேர்தலில் பூத்  சிலிப் காட்டி வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட வேண்டாம். அதே நேரத்தில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வீடு வீடாக சென்று பூத் சிலிப் தருவதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், வாக்களிக்க பூத் சிலிப் அடையாளமாக கருத முடியாது. மேலும், தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள புகைப்பட அடையாள அட்டை, பான்கார்டு, வங்கி பாஸ்புக், ஆதார் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் அளித்துள்ள ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் வேலை அட்டை, தொழிலாளர் துறை வழங்கிய சுகாதார காப்பீட்டு அட்டை, ஓய்வூதிய ஆவணம், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டியும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Booth Chilip ,election ,Lok Sabha ,The Election Commission , Lok Sabha election, Booth Chile, can not vote
× RELATED மக்களவை தேர்தலில் உ.பி.யில் பாஜகவுக்கு...