×

பாகிஸ்தான் சிறைபிடித்த சென்னை விமானி அபிநந்தன் இன்று விடுதலை: நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு

புதுடெல்லி: சர்வதேச நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்கு இருப்பதால் கடும் அழுத்தத்திற்குள்ளான பாகிஸ்தான், கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வதாக நேற்று திடீரென அறிவித்தது. அவர் இன்று வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். இதனால், இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வந்த உச்சக்கட்ட போர் பதற்றம் சற்று தணிந்துள்ளது. புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பழிதீர்க்கும் விதமாக, பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாமை இந்திய விமானப்படை போர் விமானங்கள் கடந்த 26ம் தேதி அதிகாலை குண்டுகள் வீசி தகர்த்தன. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை பாகிஸ்தான் போர் விமானங்கள் எல்லைக் கட்டுப்பாடு கோட்டை தாண்டி, இந்திய எல்லைக்குள் நுழைந்து ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டுவீச வந்தன.  சரியான நேரத்தில் இந்திய போர் விமானங்கள் இடைமறித்ததால், வெளிப்பகுதியில் குண்டுகளை வீசி பாகிஸ்தான் விமானங்கள் திரும்பின. அதில் எப்-16 விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது.

அதேபோல, இந்தியாவின் மிக்-21 விமானத்தை பாகிஸ்தான் தாக்கியது. அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற சென்னையைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாராசூட் மூலம் குதித்து பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அடுத்தடுத்த நாட்களில் இரு நாட்டு போர் விமானங்கள் எல்லை தாண்டிய நிலையில், இந்திய விமானி கைதான விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இருநாடுகள் இடையே உச்சக்கட்ட போர் அபாயம் ஏற்பட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி முப்படை தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய விமானியை உடனடியாக விடுவிக்க வேண்டும், அதுவரை அவரை மரியாதையாக நடத்த வேண்டுமென இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.  அதே நேரத்தில், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இங்கிலாந்து, சவுதி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டுகோள் விடுத்தன. ‘‘இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க அமெரிக்க உதவ தயாராக இருக்கிறது.

புல்வாமா தாக்குதல் தெற்காசியாவின் அமைதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல். பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார். இதனால், பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பு பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என பாகிஸ்தானும் சமாதானம் பேசியது. போர் பதற்றத்தை தணிக்க, இந்திய பிரதமர் மோடியுடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் பேச தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி தெரிவித்தார்.  இந்த விஷயத்தில், இந்தியாவை பொறுத்தவரையில், எந்த நிபந்தனையின்றி உடனடியாக அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என தீர்மானமாக தெரிவிக்கப்பட்டது. அபிநந்தனை விடுவிக்க வேண்டுமென பாகிஸ்தான் அரசியல் தலைவர்களும் அந்நாட்டு அரசை வலியுறுத்தினர்.

பல்வேறு முனைகளிலிருந்து அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக, அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.  அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தொடரில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென இடைமறித்த பிரதமர் இம்ரான் கான், ‘‘பதற்றத்தை தணிப்பதற்காக நல்லெண்ண அடிப்படையில், அபிநந்தன் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்படுவார். இது அமைதியை மீட்டு வருவதற்கான நடவடிக்கையாகும். வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கான முதல் கட்டமாக அபிநந்தன் விடுவிக்கப்படுவார். புல்வாமா தாக்குதல், தீவிரவாதம் உட்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் தயாராக இருக்கிறது’’ என்றார். இதற்கு அவையில் இருந்த உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.

இதன் மூலம், அபிநந்தன் லாகூரில் இருந்து தனி விமானம் மூலமாக இன்று டெல்லி அல்லது மும்பை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், மற்றொரு தகவல் அவர் வாகா எல்லை வழியாக அழைத்து வரப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கிறது. அவரது விடுதலை குறித்த செய்தியைக் கேட்டு, சென்னையில் உள்ள அபிநந்தனின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விமானி விடுவிக்கப்படுவதைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வந்த போர் பதற்றம் தணியத் தொடங்கி உள்ளது.

போர்க்கப்பல்கள் தயார் நிலை
நாட்டின் கடற்படை முன்னெப்போதும் இல்லாத நிலையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. போர்க்கப்பல்களில் வீரர்கள் அனைவரும் எதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், எந்த நிலையையும் எதிர்க்கொள்ளும் வகையில், கப்பல்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘நாட்டுக்கு எதிரான எந்த சவாலையும் சந்திக்க கடற்படை தயாராக உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தாக்குதல் திட்டத்துடன்தான் வந்தன’
இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள், வெட்டவெளிப் பகுதியில் சில குண்டுகளை வீசியதாக கூறியது. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக அவ்வாறு செய்ததாக அவர்கள் கூறினர். ஆனால், இதை இந்திய அரசு மறுத்துள்ளது. இந்திய ராணுவ நிலைகளை லேசர் தொழில்நுட்பம் மூலம் பாகிஸ்தான் விமானங்கள் குறி வைத்திருக்கின்றன. இந்திய நிலைகளை தகர்க்கும் இலக்குடனே பாகிஸ்தான் வந்துள்ளது. ஆனால், இந்திய விமானப்படை விரைவாக செயல்பட்டதால், அதன் இலக்குகள் தவறி ராணுவ நிலைகளுக்கு அருகில் இருந்த வெளிப்பகுதியில் குண்டுகள் விழுந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முப்படை தளபதிகளுடன்  பிரதமர் திடீர் ஆலோசனை
இந்திய விமானி அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையிலும், தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று மாலை முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டம் பிரதமர் மோடி இல்லத்தில் நடந்தது. இந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், நிதியமைச்சர் அருண் ஜெட்லி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதனால் டெல்லியில் நேற்று அடுத்தடுத்து பரபரப்பு நிலவியது.

அபிநந்தன் பிடிபட்ட பின் நடந்தது என்ன?
இந்திய மிக்-21 போர் விமான தாக்கப்பட்டதும், பாராசூட் மூலம் குதித்த இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். இந்திய எல்லையிலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள பாகிஸ்தானின் பிம்பர் மாவட்டம் ஹோரன் கிராமத்தில் அவர் விழுந்த பிறகு நடந்தது குறித்த சம்பவங்கள் தற்போது வெளியாகி உள்ளன. சம்பவத்தை நேரில் பார்த்த, கிராமத் தலைவர் முகமது ரசாக் சவுத்ரி (58) அளித்துள்ள பேட்டியில், ‘‘இந்திய விமானம் தீப்பிடித்து விழுவதைப் பார்த்ததும் கிராம மக்கள் அனைவரும் அந்த இடத்திற்கு ஓடினோம். பாராசூட் மூலம் உயிர் தப்பிய அந்த இந்திய விமானியை இளைஞர்கள் சுற்றி வளைத்தனர். உடனே அந்த விமானி, தன்னிடமிருந்த துப்பாக்கி மூலம் வானை நோக்கி சுட்டு எச்சரிக்கை செய்தார். சிலர் அவர் மீது கற்களை வீசி தாக்கினர். அங்கிருந்து ஓட முயன்ற அவரை சிலர் பிடித்தனர்.

அப்போது அந்த விமானி தனது பாக்கெட்டில் இருந்த ஆவணங்களை வாயில் மென்று துப்பினார். ஆத்திரத்தில் இருந்த மக்கள் அவரை தாக்கினர். நான் உட்பட சிலர் அவர்களை தடுத்து நிறுத்தி, ராணுவ வீரர்கள் வரும் வரை அமைதி காக்க கூறினோம்’’ என கூறி உள்ளார். கிராம மக்களிடம் சிக்கிய போதும், பாகிஸ்தான் ராணுவம் பிடித்த போதும் அபிநந்தன் துணிச்சலை கைவிடாமல் இருந்துள்ளார். அவர்கள் கேட்ட கேள்விக்கு தனது பெயரைத் தவிர வேறெதுவும் அவர் கூறவில்லை.

சுட்டு வீழ்த்தப்பட்ட பாக். எப்-16 விமான பாகங்கள் புகைப்படம்:
இந்திய வான் எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை இந்திய விமானப்படை  நேற்று முன்தினம் காலை சுட்டு வீழ்த்தியது. வெடித்து சிதறிய அந்த விமானத்தின் உடைந்த பாகங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் விழுந்தன. எப்-16 விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியதை பாகிஸ்தான் மறுத்தது. இந்நிலையில், அந்த விமானத்தின் உடைந்த பாகங்களும், அதன் அருகில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் நிற்பது போலவும் நேற்று முதல் முறையாக புகைப்படங்கள் வெளியாகின. இது, இந்தியாவின் மிக்-21 விமானத்தின் உடைந்த பாகங்கள் என பாகிஸ்தான் கூறினாலும், அதில் உண்மையில்லை என்பது நிரூபணமாகி உள்ளது.

24 பாகிஸ்தான் விமானங்களை விரட்டிய 8 இந்திய விமானங்கள்:
நேற்று முன்தினம் பாகிஸ்தான் போர் விமானங்கள் எல்லை தாண்டி தாக்குதல் நடத்த வந்ததன் முழு விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தகர்க்க மொத்தம் 24 பாகிஸ்தான் போர் விமானங்கள் எல்லை தாண்டி வந்துள்ளன. அதில் 8 எப்-16 விமானங்கள், 4 மிராஜ்-3, சீனாவைச் சேர்ந்த 4 ஜேஎப்-17 விமானங்களாகும். மற்ற விமானங்கள் பாதுகாப்புக்காக வந்தவை. இந்த 24 விமானங்களை விரட்ட, இந்திய விமானப்படையின் 8 விமானங்கள் சீறின. இதில், 4 சுகாய்-30, 2 மிராஜ்-2000, 2 மிக்-21 பைசன் விமானங்களாகும். மிக்-21 போர் விமானத்தை ஓட்டிய விங் கமாண்டர் அபிநந்தன், வானில் இருந்தபடி வான் இலக்கை தாக்கும் ஆர்-73 ஏவுகணை மூலம் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை வெற்றிகரமாக தகர்த்துள்ளார்.

அதிலிருந்த 2 விமானிகள் பாராசூட் மூலம் குதித்து பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்து தப்பினர். அதே நேரத்தில், எப்-16 விமானத்திலிருந்து ஏவப்பட்ட 2 நவீன ஆம்ராம் ஏவுகணைகளில் ஒன்று, அபிநந்தன் ஓட்டிச் சென்ற மிக்-21 விமானத்தை தகர்த்தது. இச்சம்பவம் காலை 9.45 மணி அளவில் நடந்துள்ளது. எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவுக்குள் பாகிஸ்தான் விமானங்கள் ஊடுருவி வந்துள்ளன.

கொடுமைபடுத்திய பாக். ராணுவத்தினர்:
இதற்கு முந்தைய சம்பவங்களில் இந்திய ராணுவத்தினர், பாகிஸ்தானில் சிக்கிய போது அவர்களை அந்நாட்டு ராணுவத்தினர் கொடூரமாக கொடுமைப்படுத்தி உள்ளனர். கடந்த 1999ம் ஆண்டு கார்கில் போரின்போது, விமானப்படை வீரரான நச்சிகேட்டா பாகிஸ்தானிடம் சிக்கினார். இவரது விமானம் இன்ஜின் கோளாறு காரணமாக, வேறு வழியின்றி அவர் பாராசூட் மூலம் குதிக்க வேண்டியதாகி விட்டது. கார்கில் போரில் பாகிஸ்தானிடம் சிக்கிய ஒரே இந்திய வீரர் அவர். அவரை 8 நாட்கள் சிறையில் அடைத்து ராணுவத்தினர் பல கொடுமைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் ஆளாக்கி உள்ளனர். மனதளவிலும், உடல் ரீதியாகவும் அவர்கள் செய்த கொடுமைகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது என நச்சிகேட்டா கூறி உள்ளார்.

பின்னர், மூத்த அதிகாரி ஒருவர் நச்சிகேட்டாவை கொடுமைகளில் இருந்து மீட்டு, ராவல்பிண்டி சிறையில் அடைத்திருக்கிறார். ‘பாகிஸ்தான் ராணுவத்தினர் இருந்த கோபத்தில் என்னை அடித்தே கொன்றிருப்பார்கள்’ என இந்தியா திரும்பிய நச்சிகேட்டா பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.  ஆனால், அபிநந்தன் விஷயத்தில் இதுபோன்ற கொடுமைகள் எதுவும் நடக்கவில்லை என நம்பப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : prisoner ,Pakistani ,Imran Khan ,Abhinanthan ,announcement , Pakistani prison, Chennai pilot Abhinandan, Liberation, Parliament, Prime Minister Imran Khan
× RELATED மக்கள் தீர்ப்பை திருடிய அதிகாரிகள்...