×

அதிமுக சார்பில் வருகிற 6ம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் பிரதமர் மோடி பங்கேற்கிறார்: கட்சிகளுக்கான தொகுதி அறிவிக்க வாய்ப்பு., இபிஎஸ், ஓபிஎஸ் மும்முரம்

சென்னை: அதிமுக சார்பில் வருகிற 6ம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். மேலும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜ போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாமகவுக்கு 7 மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இன்னுல் சில கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  குறிப்பாக, கூட்டணியில் சேர பாமகவை விட தங்களுக்கு அதிக சீட் தர ேவண்டும் என்று தேமுதிக அடம்பிடித்து வருகிறது. அதிமுக தரப்பில் 3 சீட்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறுவதால் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில் பாஜ தரப்பில் இருந்தும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால், தேமுதிகவுக்கு உறுதியான பதிலை தராமல் அதிமுகவும் பேசி வருகிறதாம்... இதைத் தொடர்ந்து தற்போது தேமுதிக இறங்கி வந்து தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டுள்ளதாம். இதனால் மீண்டும் பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளதாம். இது ஒருபுறம் இருக்க  கூட்டணி முடிவாகாததால் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் என்ற அறிவிப்பு வெளியிட முடியாமல் அதிமுக தத்தளித்து  வருகிறது. விஜயகாந்த் கூட்டணிக்கு வந்து விட்டால் அந்த பிரச்னைகள் தீர்ந்து விடும். அதன் பிறகு கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் பேசி எந்தெந்த தொகுதிகள் என்பது இறுதியாகி செய்யப்பட்டு விடும்.

கூட்டணிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி அறிவிக்க இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். திட்டமிட்டுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளார். இந்த பொதுக்கூட்டத்தை வருகிற 6ம் தேதி அதிமுக நடத்துகிறது. பொதுக்கூட்டத்தில் அதிக அளவில் கூட்டம் காட்ட வேண்டும் என்பதால் அதற்கு ஏற்றார் போல் இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக சென்னை வண்டலூர், மறைமலை நகர், ஒரகடம், காஞ்சிபுரம் ஆகிய 4 இடங்களை அதிமுக தரப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏதாவது ஒரு இடத்தை இறுதி செய்து பொதுக்கூட்டத்தை நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்திலேயே கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற அறிவிப்பும் வெளியிட அதிமுக முடிவு செய்துள்ளது.மக்களவை தேர்தலுக்காக அதிமுக நடத்தும் முதல் பொதுக்கூட்டம் மற்றும் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் என்பதால் கூட்டம் அதிக அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் இருந்து அதிமுகவினர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசு நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்பு பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகைபொதுக்கூட்டம் ரத்து
பிரதமர் மோடி இன்று மதியம் கன்னியாகுமரி வருகிறார். அரசு நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்கிறார். பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  மத்திய அரசின் சார்பில் முடிக்கப்பட்ட சுமார் 40 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் இன்று மதியம் 1 மணிக்கு நடக்கிறது. விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இதற்காக பிரதமர் மோடி இன்று (வெள்ளி) மதியம் 2 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார்.  அரசு விழாவில் பங்கேற்ற பின் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து டெல்லி செல்கிறார்.பிரதமர் மோடி கன்னியாகுமரியில் அரசு நிகழ்ச்சியை முடித்து விட்டு, தனியாக பா.ஜ. பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு திடீரென இந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பிரதமர் வருைகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,summit ,parties ,AIADMK , AIADMK, general meeting, PM Modi, EPS, OPS
× RELATED கோவையில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் பேரணி தொடங்கியது