×

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் கேத்ரின், டேனியலி வேகத்தில் வீழ்ந்த இந்தியா: இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி

மும்பை: இங்கிலாந்து பெண்கள் அணியை தொடர்ந்து 2 ஒருநாள் போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றிய இந்திய பெண்கள் அணி கடைசி ஒருநாள் ேபாட்டியில் கேத்ரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தோல்வியடைந்தது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பெண்கள் அணி   3 ஒருநாள், 3 டி20  போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா பெண்கள் அணி கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டி மும்பையில்  நேற்று நடைப்பெற்றது. டாஸ் வென்ற  இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெமீமா ேராட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். இந்தப் போட்டியிலும் முதல் ஓவரின் 2வது பந்தில் ஜெமீமா டக் அவுட்டாகி வெளியேறினார். அதன் பிறகு ஸ்மிரிதி மந்தனா வழக்கம் போல் அதிரடியாக ரன்களை குவித்தார். அவருக்கு பூனம் ரவுத் கைகொடுக்க 2வது விக்கெட்டுக்கு  128 ரன்கள் சேர்த்தனர். மந்தனா 66 ரன்களும், ரவுத் 56 ரன்களும் எடுத்து கேத்ரீன்  பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட்டாயினர். அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 131ரன்கள் எடுத்திருந்தனர்.

அடுத்து வந்தவர்களில் தீப்தி ஷர்மா ஆட்டமிழக்காமல் 27 ரன்களும், ஷிகா பாண்டே 26 ரன்களும் எடுத்தனர். இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் கேத்ரீன் 10 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். நாடலியா, அன்யா, ஜார்ஜியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். தொடர்ந்து இங்கிலாந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அமி ஜோன்ஸ், டம்மி பீவுமண்ட் ஆகியோர் இந்தியாவை எதிர்கொண்டனர். இங்கிலாந்து வீராங்கனைகள் சீரான ஆட்டை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் விக்கெட்களும் சரிந்தபடி இருந்தது. ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து 49 ரன்கள் எடுத்திருந்தது. அதனால் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக மாறியது. ஆனால் ஹீதர் நைட்,   டேனியலி வியட், ஜார்ஜியா ஆகியோர் நிலைத்து விளையாட ஆரம்பித்ததும் ஆட்டத்தின் போக்கு மாறத் தொடங்கியது. ஹீதர் 47 ரன்களில் அவுட்டானார். அடுத்து டேனியலி-ஜார்ஜியா  தொடர்ந்து  11ஓவர்கள் விளையாடி  7 வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்தனர். டேனியலி 56 ரன்களில் அவுட்டாக இந்தியாவுக்கு வாய்ப்பு தெரிந்தது.

ஆனால் அந்த வாய்ப்பை ஜார்ஜியாவும், கேத்ரினும் சிதைத்தனர். அதனால் 48.5 ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 208 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிப் பெற்றது. கேத்ரின் 18 ரன்களும், ஜார்ஜியா ஆட்டமிழக்காமல் 33 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில்  ஜூலன் கோஸ்வாமி 3 விக்கெட்களும், ஷிகா பாண்டே, பூனம் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், தீப்தி சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். போட்டியின் சிறந்த வீராங்கனையாக கேத்ரீன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி 2-1 என்று முடிந்தது. அடுத்து 2 அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி மார்ச் 4ம் தேதி கவுகாத்தியில் நடைபெறும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Women ,India ,England ,Danish , Women's One Day Cricket, Kathryn, Deny, India
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ