×

காலியாக உள்ள நிலங்களில் ஆக்கிரமிப்பை தடுக்க பள்ளி, கல்லூரிகள் கட்ட முடிவு: கோயில் வருவாய் மூலம் நிர்வகிக்க திட்டம்

சென்னை: காலியாக உள்ள நிலங்களில் பள்ளி, கல்லூரிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40,190 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்களும் அடக்கம். இந்த கோயில்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சொந்தமாக உள்ளது. இதை பயன்படுத்தாததால் அந்த கோயில்களின் நிலங்களை சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.  இதனால், ஒவ்வொரு ஆண்டும் கோயில் சொத்துக்கள் அரசின் பதிவேட்டில் இருந்து மாயமாகி வருவதை காண முடிகிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் 600 ஏக்கர் கோயில் நிலத்தை தனியார் ஆக்கிரமித்துவிட்டனர் என்ற விவரம் அரசின் கொள்கை விளக்க குறிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொத்துக்களை கண்டறியும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள் கொண்ட 55 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர்  சொத்துக்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கும் வகையில், காலியாக உள்ள நிலங்களில் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வாடகைக்கு விடலாம் என்று அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘அறநிலையத்துறையில், கல்லூரி, பாலிடெக்னிக், மேல்நிலை, உயர்நிலை பள்ளி என 54 கல்வி நிலையங்கள் உள்ளது. இந்த கல்வி நிறுவனங்கள் கோயில்  நிர்வாகம் மூலம் கிடைக்கும் நிதியின் மூலம் தான் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் புதிதாக கல்வி நிலையங்கள் ஏற்படுத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, வருமானம் வரக்கூடிய கோயில் நிர்வாகங்களிடம்  இது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டுள்ளது. அந்த நிர்வாகம் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் அங்கு புதிதாக  பள்ளி, கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளது’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : school ,colleges ,aggression ,lands , Occupation, school, colleges, temple revenue
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி