×

பாகிஸ்தானில் உள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நாளை விடுதலை : வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் உள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் நாளை விடுவிக்கப்படுகிறார் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

எல்லை பகுதிகளில் போர் பதற்றமும் இந்திய விமானி பாகிஸ்தானில் சிறைபிடிப்பும்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி தரும் விதமாக, இந்திய விமானப்படையின் மிராஜ்-2000 போர் விமானங்கள், நேற்று முன்தினம் அதிகாலை எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தது. பாலகோட்டில் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மிகப் பெரிய முகாம் மீது ஆயிரம் கிலோ குண்டுகளை வீசி, 350 தீவிரவாதிகளை தூங்கிக் கொண்டிருந்த போதே கூண்டோடு ஒழித்துக் கட்டியது.  

பாலகோட் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்துவதற்காக நேற்று அதிகாலை காஷ்மீர் எல்லையை தாண்டி வந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டி அடித்தன. நடுவானில் நடந்த இந்த பரபரப்பான சண்டையின் போது, பாகிஸ்தானின் எல்லைக்குள் புகுந்து அந்நாட்டின் எப்-16 போர் விமானம்  ஒன்றை சுட்டு வீழ்த்தியது. அதேபோல், பாகிஸ்தானும் இந்தியாவின் மிக் -21 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அதை இயக்கிய சென்னை விமானி அபிநந்தனை அந்நாடு சிறை பிடித்தது..

சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு


இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சீனா மட்டுமின்றி இலங்கை, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன. இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டுமென அனைத்து நாடுகளும் ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்து வருகின்றன.பயங்கரவாத அமைப்புகளை அழிக்க பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை தொடர்ந்து ஜப்பானும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தந்துள்ளது.

அபிநந்தனை மீட்பது குறித்து இதுவரை நிகழ்ந்த நிகழ்வுகள்

*பாகிஸ்தானில் சிக்கியுள்ள இந்திய விமானியை மீட்பது குறித்து பிரதமர் மோடி முப்படை தளபதிகளுடன் 2 முறை ஆலோசனை நடத்தினார்.

*அபிநந்தனை ஒப்படைக்குமாறு நேற்று இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் துணை தூதரிடம் வெளியுறவுத்துறை வலியுறுத்தியது.

*இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தி இருந்தார்.

*இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்க யுடியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

*இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் குறித்தும் அபிநந்தனை மீட்பது குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற இருந்தது.

* இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிப்பது குறித்து ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது.

* அபிநந்தன் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதாக பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ நாளிதழான டான் பத்திரிகையில் தகவல் வெளியாகியது.

* ஜெனிவா ஒப்பந்தபடி அபிநந்தனை போர் கைதியாக கருதலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அந்த பத்திரிகையில் குறிப்பிட்டு இருந்தது.

*இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. மேலும் உடனடியாக நாட்டுக்கு திருப்பி அனுப்பவே பாகிஸ்தானிடம் வலியுறுத்தினோம்  என்றும் மேலும் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விடுதலை


இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் நாளை விடுவிக்கப்படுகிறார் என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். இருநாடுகளிலும் அமைதி நிலவ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிக்க முடிவு எடுத்துள்ளதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என இந்தியா சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பேச்சுவார்த்தைக்கான முதல்படியாக இந்திய வீரரை விடுவிப்பதாக பிரதமர் இம்ரான் கான் விளக்கம் அளித்துள்ளார்.மேலும் இந்திய பிரதமர் மோடியுடன் பேசுவேன் என்றும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் இம்ரான் கான் மேலும் தெரிவித்துள்ளதாவது,அமைதி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அபிநந்தனை விடுவிக்கிறோம்; பதற்றத்தை அதிகரிப்பது யாருக்கும் பயன்தராது; என்று கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian ,Pakistan ,border ,Wagah , Abhinandan, Liberation, Air Force Pakistan, Imran Khan
× RELATED பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடியதாக...