×

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று ஆஜர்: ஜெயலலிதா மரணத்தில் மர்ம முடிச்சுகள் அவிழுமா?

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டிசம்பர் 20, ஜனவரி 8, ஜன.23, ஜன.29, பிப்.5, பிப்.19 ஆகிய தேதிகளில் ஆஜராக வருமாறு ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால், ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், வரும் பிப்ரவரி 28ம் தேதி ஆஜராக ஆணையம் சார்பில் கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பேரில் இன்று காலை 10 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஓபிஎஸ் ஆஜராகிறார். அவரிடம் ஆணைய வழக்கறிஞர் முகமது ஜபாருல்லாகான் விசாரணை நடத்துகிறார். தொடர்ந்து, அன்றைய தினமே சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்கிறார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை ஓ.பன்னீர்செல்வம் எழுப்பி இருந்தார். அதில், குறிப்பாக, ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள், அவரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்லாதது ஏன், அமைச்சர்கள் நேரில் பார்க்க அனுமதிக்கப்படாதது ஏன் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக ஆணையம் அவரிடம் விசாரிக்க இருக்கிறது. இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறும்போது, ‘அப்போலோ மருத்துவமனை சார்பாக 7 சாட்சிகள் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால், அப்போலோ தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் எங்கள் தரப்பு சாட்சியங்களை விசாரணைக்கு கொண்டு வர முடியாத சூழல் இருப்பதாக தெரிவித்தனர்.

அந்த மனுவை நீதிபதி பரிசீலனை செய்வதாக கூறினார். அதே நேரத்தில் எங்கள் தரப்பில் ஓபிஎஸ் வருவதாக இருப்பதால், அப்போலோ தாக்கல் செய்த மனுவால் விசாரணையை தள்ளி வைக்க கூடாது என்று வலியுறுத்தினேன்.  எப்போது ஆணையம் சம்மன் அனுப்பினாலும் நான் வர தயார் என்று ஓபிஎஸ் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசியுள்ளார். அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதன்பேரில் ஓபிஎஸ் நாளை (இன்று) வருவார் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது. அவர் வரும் பட்சத்தில் நாங்களும் நாளை (இன்று) குறுக்கு விசாரணை செய்வோம்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,OBS ,Arumugamasi Commission of Inquiry ,death ,Jayalalithaa , Aurangasamy inquiry, OBS, Azer
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...