×

பசுமை பட்டாசு வேதிப்பொருள் கண்டுபிடிப்பு சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் இன்று முதல் முழுமையாக திறப்பு: முடிவுக்கு வந்த 107 நாள் போராட்டம்

சிவகாசி:  பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான புதிய வேதிப்பொருளை ‘நீரி’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதால், இன்று முதல் பட்டாசு ஆலைகள் முழுமையாக திறக்கப்பட உள்ளன. இதனைத்தொடர்ந்து 107 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் மூலம் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடைகோரிய வழக்கில் உச்சநீதிமன்றம், பட்டாசு தயாரிக்க பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தக்கூடாது. பசுமை பட்டாசு மட்டும் தயாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இவற்றை மறுபரீசிலனை செய்யக்கோரி, கடந்த நவ.13 முதல் பட்டாசு ஆலைகளை மூடி, உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர்.

பட்டாசு ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பட்டாசு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு தாக்கல் செய்த மனு பிப்.20ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பசுமை பட்டாசு குறித்து உடனடியாக ஆய்வு நடத்தி, பிப்.26க்குள் பிரமாணப் பத்திரம் (அபிடவிட்) தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மத்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (நீரி) முதன்மை விஞ்ஞானி சாதனா ராயலு தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, கடந்த 22ம் தேதி சிவகாசி வந்து, பசுமை பட்டாசுக்கான புதிய வேதிப்பொருளை ஆலை உரிமையாளர்களிடம் கொடுத்து சோதனை செய்து பார்த்தனர். 4 நாளாக நடந்த சோதனைக்கு பின் புதிய வேதிப்பொருள் கலவையை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் தயாரிக்கப்படும் பட்டாசில் 30 முதல் 40 சதவீதம் வரை புகை மாசு குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சிவகாசி டான்பாமா சங்கத்தில், பட்டாசு உரிமையாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பசுமை பட்டாசு தயாரிக்க, நீரியிடம் விண்ணப்பம் கொடுப்பது என முடிவு செய்தனர். இதையடுத்து இன்று முதல் (பிப். 28) அனைத்து ஆலைகளையும், முழுமையாக திறந்து உற்பத்தி பணிகளை துவக்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘‘கலெக்டர் அறிவுறுத்தல்படி நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட ஒரு சில பட்டாசுகளை, ஆலை உரிமையாளர்கள் தயாரித்து வந்தனர். பசுமை பட்டாசுக்கான வேதிப்பொருளுக்கு மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகம் அனுமதி அளித்த பின்புதான், வணிகரீதியாக உற்பத்தி பணிக்கு பயன்படுத்த முடியும். இதற்கு சில தினங்கள் ஆகும். அதுவரை தொழிலாளர்களின் நலன் கருதி, நீதிமன்றம் அனுமதித்துள்ள பட்டாசுகளை தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இன்று முதல் அனைத்து பட்டாசு ஆலைகளும் திறக்கப்படுகிறது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Green Fire Crackers Chemical Discovery Industry Sivakasi Bhattas Industries ,Struggle , Green Crackers, Sivakasi Fireworks Factory
× RELATED கோவை மருதமலை வனத்தில் உடல்நலம்...