×

கம்பெனி விதிகளை மீறியதாக புகார் செபி நடவடிக்கை பாய்வதால் கலக்கத்தில் சர்க்கரை ஆலைகள்

* விவசாயிகளுக்கு நிலுவை வழங்குவது மேலும் தாமதமாகும்
* தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அரசுக்கு சோதனை
புதுடெல்லி: சர்க்கரை ஆலைகள் மீது செபி நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. இதுபோல் நூறு மில்களின் மேல் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்க்கரை ஆலைகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு நிலுவை தொகை மேலும் தாமதம் ஆகும் அபாயம் உருவாகியுள்ளது. சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகை ரூ20,000 கோடிக்கு மேல் உள்ளது. இந்த நிலுவை, தேர்தல் நெருங்குவதற்குள் ரூ35,000 கோடியை எட்டலாம் என்று அஞ்சப்படுகிறது. சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க ஏதுவாக, குறைந்த விற்பனை விலையை மத்திய அரசு கிலோவுக்கு ரூ32 ஆக உயர்த்தியது.

இந்த சூழ்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள 2 சர்க்கரை ஆலைகள் மீது செபி எடுத்த நடவடிக்கை, பிற சர்க்கரை ஆலைகள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்பெனிகள் சட்ட விதிகளின்படி, பட்டிலிடப்படாத நிறுவனங்கள் அதிகபட்சமாக 49 பேருக்கு மட்டுமே பங்குகளை விற்பனை செய்யலாம். ஆனால் இதை மீறி 50 பேருக்கு சர்க்கரை ஆலை ஒன்று விற்பனை செய்ததாக செபி கண்டுபிடித்தது. இதையடுத்து லோக் மங்கள் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் மீது கடந்த மாதம் நடவடிக்கை எடுத்தது. ஒரு வாரம் கழித்து, இதே விதிமீறல் குற்றத்துக்காக பபான் ராவோஜி ஷிண்டே சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுபோல் 100 சர்க்கரை ஆலைகள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவற்றின் மீதும் செபி நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஆலைகள் அனைத்தும் முடக்கப்பட்டு, சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்படும். ஏற்கெனவே சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு நிலுவை தொகையை வழங்க முடியாமல் திணறி வருகின்றன.

செபியின் இந்த நடவடிக்கையால் சர்க்கரை ஆலைகளுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 6ம் தேதி புள்ளி விவரப்படி மகாராஷ்டிராவில் சர்க்கரை உற்பத்தி 13.29 சதவீதம் அதிகரித்திருந்தது. இங்கு மொத்தம் 185 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 489.51 லட்சம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சர்க்கரை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் மாநிலங்களில் ஒன்றான மகாரஷ்டிராவில் உள்ள சர்க்கரை ஆலைகள் மீது செபியின் நடவடிக்கை அடுத்தடுத்து பாய்ந்தால், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்குவது மேலும் தாமதம் ஆகும். இது மத்திய அரசுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

* மகாராஷ்டிராவில் 185 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் கடந்த மாதம் 6ம் தேதி புள்ளி விவரப்படி 489.51 லட்சம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
* பங்கு விற்பனையில் கம்பெனிகள் சட்ட விதிகளை மீறியதாக தற்போது 2 சர்க்கரை ஆலைகள் மீது செபி நடவடிக்கை எடுத்துள்ளது. இன்னும் 100 ஆலைகள் இதுபோல் விதி மீறலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
* விதிமீறல் செய்த ஆலைகள் மீது செபி நடவடிக்கை தொடர்ந்தால் இந்த ஆலைகள் முடக்கப்படுவதோடு, விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்குவதில் பெரும் தடையாக அமையும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : company ,breach , Company fate, complaint, SEBI activity, sugar mills
× RELATED உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்க...