×

திருச்சியில் போட்டியா? : வைகோ மறுப்பு

கோவை: `திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை திருப்திகரமாக உள்ளது. திருச்சியில் நான் போட்டியிடுவதாக வெளியான தகவல் உண்மை இல்லை’ என்று வைகோ கூறினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கோவை பீளமேடு விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் முகிலன் ஆவணப்படம் வெளியிட்டார். புகைப்படங்கள் உள்பட இன்னும் சில ஆவணங்கள் இருப்பதாக முகிலன் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் காணாமல் போய்விட்டார். 13 நாட்களுக்கு மேலாகி விட்டது. கண்டுபிடிக்க முடியவில்லை. அவர், காணாமல்போன அன்று இரவு 12.45 மணி வரை தொடர்பில் இருந்துள்ளார். முகிலன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருந்தால், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மற்றும் தமிழக காவல்துறை, தமிழக அரசுதான் பொறுப்பு.

வரும் மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வரும்போது கருப்புக்கொடி காட்டப்படும். முல்லை பெரியாரில், புதிய அணை கட்ட ஆய்வறிக்கை தயாரிக்க அனுமதி அளித்தது, நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டது, 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம், ஹைட்ரோ கார்பன் திட்டம், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராதது, விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுர விவகாரம், நியூட்ரினோ திட்டம், சமஸ்கிருதம் திணிப்பு போன்ற விவகாரத்தில் தமிழகத்துக்கு அநீதி இழைக்கும் பிரதமர் மோடிக்கு எதிராக நிச்சயம் கருப்புக்கொடி காட்டப்படும். தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை திருப்திகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கிறது. திருச்சியில் நான் போட்டியிடுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. இன்னும் ஆட்சிமன்ற குழு கூடவில்லை. ஆட்சி மன்ற குழு கூடிய பிறகு முடிவு செய்யப்படும். இவ்வாறு வைகோ கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trichy ,Vaiko , To play in Trichy?,Vaiko denial
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...