×

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரம்

கூடலூர் : முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வெளிவட்ட வனப்பகுதியான மசினகுடி, சிங்கரா மற்றும் சீகூர் வனப்பகுதிகளில் கடந்த 23ஆம் தேதி காட்டு தீ ஏற்பட்டது. இதனால், மசினகுடி வனச்சரகம் மன்றாடியார் வனப்பகுதியில் அரிய  வகை மூலிகைகள் புற்கள், செடி, கொடிகள் தீயில் கருகின.  இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், வனப்பகுதியில் சுமார் 15 கிலோமீட்டர் தூர சாலை ஒரத்தில்  புல்வெளிகளில் எதிர் தீ வைக்கப்பட்டு காட்டு தீ வேறு பகுதிக்கு பரவாமல் கட்டுபடுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வனப்பகுதிகளில் ஆங்காங்கே சாய்ந்து கிடக்கும் மற்றும் காய்ந்த நிலையில் உள்ள மரங்களில்  ஏற்பட்டுள்ள நெருப்பை அணைக்கும் பணியில் வனத்துறையினர் நேற்று ஈடுபட்டனர். வனச்சரகர்கள் மாரியப்பன்,  காந்தன், செல்வம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயை முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதேபோல்  கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட காட்டு தீயால் சுமார் 2 ஆயிரம் ஹெக்டர் வனம் சேதமடைந்தது. மேலும் காற்றின் வேகத்தால் தீ முதுமலை வனப்பகுதிகளில் பரவாமல் தடுக்க புலிகள் காப்பகத்தை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் காற்றின் வேகத்தால் புலிகள் காப்பகத்தில் ஒரு சில இடங்களில் தீ பரவியது. இதைத்தொடர்ந்து வன ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி காட்டுத் தீயை கட்டுப்படுத்தினர். தற்போது வனக்குழுவினர் இரவு பகலாக வனப்பகுதியை கண்காணித்து வருகின்றனர். மேலும் இங்குள்ள நீரல்லா மற்றும் மூன்று மாநில சந்திப்பு பகுதியில் தமிழக, கர்நாடக, கேரள வனத்துறையினர் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mudumalai Tigers , Mudumalai ,Wild fire,Forest Area,Forest fire
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தில்...