×

3 நாள் கடும் போராட்டத்திற்கு பிறகு முற்றிலும் அணைக்கப்பட்டது முதுமலை காட்டுத்தீ

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் பற்றி எரிந்து வந்த காட்டுத்தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டு விட்டதாக மாவட்ட வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன் பற்றிய காட்டுத்தீ, நீலகிரி முதுமலை புலிகள் சரணாலய பகுதிக்கும் பரவியது. அத்துடன் கேரள மாநில வனப்பகுதியான முத்தங்கா சரணாலயத்திற்கும் காட்டுத் தீ பரவியது. தீயை கட்டுப்படு்த்தும் பணியில் 3 மாநில வனத்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மசினகுடி வனச்சரகம் மன்றாடியார் வனப்பகுதியில் அரிய  வகை மூலிகைகள் புற்கள், செடி, கொடிகள் தீயில் கருகின.  இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், வனப்பகுதியில் சுமார் 15 கிலோமீட்டர் தூர சாலை ஒரத்தில்  புல்வெளிகளில் எதிர் தீ வைக்கப்பட்டு காட்டு தீ வேறு பகுதிக்கு பரவாமல் கட்டுபடுத்தப்பட்டது.

முதுமலையின் வெளிவட்ட பகுதியான மசினகுடி சிங்கரா மற்றும் சீகூர் பகுதிகளில் முதலில் தீ அணைக்கப்பட்டது. பின்னர் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட உள்வட்ட பகுதிகளில் எரிந்து வந்த தீயும் படிப்படியாக அணைக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான தண்ணீரை கொண்டு செல்ல இயலாத சூழலில் வேறு வழியின்றி தீ தடுப்பு கோடு போன்று எதிர் தீயை ஏற்படுத்தி தீயை அணைத்ததாக வன்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மாயார், சிறியூர், விபூதி மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் இன்று காலை முதல் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fighting ,Mudumalai ,forest , Mudumalai, wildfires, completely extinguishers
× RELATED முதுமலையில் பூத்துக்குலுங்கும் சிவப்பு கொன்றை மலர்கள்