×

இடையூறாக உள்ள கட்சி கொடி கம்பத்தை அகற்றாமல் நிழற்குடை கட்டுமான பணியை தடுத்து நிறுத்திய அதிமுகவினர்: பொதுமக்கள் அதிருப்தி

தாம்பரம்: குரோம்பேட்டையில் இடையூறாக உள்ள கட்சி கொடி கம்பத்தை அகற்றாமல் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கும் பணியை அதிமுகவினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.   தாம்பரம் அடுத்துள்ள குரோம்பேட்டை புறநகரின் முக்கிய பகுதியாக திகழ்கிறது. தற்போது குரோம்பேட்டை பகுதியில் பிரபல  துணிக்கடைகள், நகைக்கடைகள், ஓட்டல்கள், திரையரங்கம் என பெருகிக்கொன்டே  வருவதால் தினமும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான  பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி குரோம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளான ராதா நகர், கணபதிபுரம், கஜலட்சுமி காலனி, நேரு நகர், அஸ்தினாபுரம், திரு.வி.க நகர், முத்துசாமி நகர், விக்னேஷ் நகர், நெமிலிச்சேரி, லக்ஷ்மன் நகர், நாகப்பா நகர், லட்சமிபுரம், ஸ்ரீபுரம், அங்காளம்மன் நகர், நாகல்கேணி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் மற்றும் ரயில் நிலையம் வந்து செல்கின்றனர்.

பல்லாவரம் நகராட்சி அலுவலகமும்  குரோம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ளதால், தினசரி பல்வேறு  தேவைகளுக்காக, நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து  செல்கின்றனர். இதனால், குரோம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்து மட்டும் ஒருநாளைக்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக கடந்த சில வருடங்களுக்கு முன் பல்லாவரம் - தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகில் பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால், இந்த நிழற்குடையில் இருக்கைகள் உடைந்தும், மின் விளக்குகள் பழுதடைந்தும், மேற்கூரை சேதமடைந்தும் காணப்படுகிறது.

இந்நிலையில், பயணிகள் நலன் கருதி, பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ., இ.கருணாநிதி தொகுதி மேம்பாட்டு நிதியில் 25 லட்சத்தில் இதன் அருகே, புதிய நவீன நிழற்குடை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகளை பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் சமீபத்தில் தொடங்கினர்.  புதிய நிழற்குடை அமைக்கும் இடத்தில் தேமுதிக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள்,  பாஜ, தமுமுக, நாம் தமிழர் கட்சி, புரட்சிபாரதம், திமுக, அதிமுக என அனைத்து கட்சி கொடிக்கம்பங்கள் இருந்தன. நிழற்குடை பணிக்காக அந்த கொடி கம்பங்களை சிறிது தூரம் தள்ளி அமைத்துக் கொள்ளுங்கள் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.  இதையேற்று அனைத்து கட்சியினரும் தங்களது கட்சி கொடி கம்பங்களை நகர்த்தி அமைத்தனர். ஆனால், அதிமுகவினர் மட்டும் எங்கள் கட்சி கொடி கம்பத்தை அகற்ற முடியாது.வேண்டுமானால், எங்கள் கட்சி கொடி கம்பம் இருக்கும் இடத்தில் மூன்று மீட்டர் இடம் ஒதுக்கிவிட்டு நிழற்குடை அமைத்துக் கொள்ளுங்கள், என தெரிவித்துள்ளனர்.

இதனால், புதிய நிழற்குடை அமைக்கும் பணிகளை தொடர முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘குரோம்பேட்டை ரயில்நிலையம் அருகில் பயணிகளுக்காக நவீன வசதிகளுடன் கூடிய புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதற்காக அங்கு ஏற்கனவே இருந்த கட்சி கொடி கம்பங்களை சம்மந்தப்பட்ட கட்சிக்காரர்களே அங்கிருந்து அகற்றி, சிறிது தூரம் தள்ளி அமைத்துக்கொண்டனர். ஆனால் அதிமுகவினர் தங்களது கொடி கம்பத்தை அங்கிருந்து அகற்றாமல் முட்டுக்கட்டையாக உள்ளனர்.   மற்றவர்களுக்கு ஒரு நீதி. ஆளும்கட்சினருக்கு ஒரு நீதியா?.  எனவே நகராட்சி அதிகாரிகள் இதில் பாரபட்சம் பார்க்காமல், பொதுமக்கள் தேவைக்காக அங்கிருந்து அதிமுக கட்சி கொடிக்கம்பத்தை அகற்றி அருகில் சிறிது தூரம் தள்ளி அமைத்து, பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கும் பணிகளை மீண்டும் தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எறனர்.

அதிகாரி மழுப்பல்
பல்லாவரம் நகராட்சி பொறியாளர் கருப்பையராஜா கூறுகையில், ‘‘புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கும் பணிகள் நிறுத்தப்படவில்லை. பணிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருகிறது. கொடி கம்பம் தொடர்பாக பேச்சுவார்தை நடைபெற்றுக்கொண்டு இருகிறது.  எனவே விரைவில் சுமுக தீர்வு காணப்பட்டு நல்லபடியாக பேருந்து நிறுத்தம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Opponents , Party Flag, Pongal, AIADMU, Public
× RELATED உள்ளாட்சி தேர்தல் அதிமுக ஆலோசனை...