×

ஓராண்டை நெருங்கியும் தொடர்ந்து ஜாமீன் மறுப்பு யாரை காப்பாற்ற நிர்மலாதேவி பலிகடா?

* உடல்நலம் பாதித்தும் சிகிச்சை அளிக்க மறுப்பு * சிறையிலேயே சாகடிக்க சதி செய்வதாக புகார்

சிறப்பு செய்தி:கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில், கைதாகி ஓராண்டை நெருங்கியும் பேராசிரியை நிர்மலாதேவிக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. யாருக்காகவது அவர் பலிகடாவாக்கப்படுகிறாரா? உடல்நலம் பாதித்தும் அவருக்கு சிகிச்சை அளிக்கக்கூட மறுப்பது ஏன்? என பல கேள்விகள் எழுந்துள்ளன. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் அக்கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலரிடம் செல்போனில் பேசி, உயர்பொறுப்பில் உள்ளவர்களுடன் பாலியல் உறவுக்கு அழைத்த ஆடியோ தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியான அந்த ஆடியோவில் அவர், தமிழக அரசில் உயர் பொறுப்பில் உள்ளவர் ஒருவரையும், கல்வித்துறை உயரதிகாரிகள் சிலரது பெயரையும் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.


ஆதாரங்கள் அழிப்பு: இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் நிர்மலாதேவி கடந்த ஆண்டு, ஏப்ரல் 16ம் தேதி கைதானார். முன்னதாக சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அப்போது போலீசாரில் சிலர் வீட்டிற்குள் நுழைந்து, நிர்மலாதேவி போனில் உள்ள முக்கிய விஐபிக்கள் எண், அவர் பேசிய அழைப்புகளில் உள்ள பெயர்களை அழித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது கம்ப்யூட்டரில் இருந்து முக்கிய ஆதாரங்களையும் அழித்த பின்னரே கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் தரப்பில் புகார் தெரிவித்தனர். கைதான இரவு விருதுநகர் எஸ்பி ராஜராஜன் நிர்மலாதேவியிடம் தனி அறையில் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார். அதன்பின் போலீஸ் விசாரணையும் நடந்தது. அப்போது, ‘‘சில முக்கிய தகவல்களை தெரிவிக்க வேண்டாம். நாங்கள் கூறுவதைத்தான் தெரிவிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர். பின்னர் அவரை வேனில் வைத்து சுமார் பல மணி நேரம் இரவிலேயே சுற்றிக்கொண்டிருந்தனர்.

இவ்வழக்கு மறுநாள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி பெண் எஸ்பி, 3 டிஎஸ்பிக்கள் உள்ளிட்டோர் நிர்மலாதேவியிடம் பல மணி நேரம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில் அவர் அளித்த வாக்குமூலம் விசாரித்தவர்களை திடுக்கிட வைத்தது. இதைதொடர்ந்து, இவ்வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் சிபிசிஐடி தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது. 3 மாதங்களுக்குள் அறிக்கை: மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக, கவர்னர் தரப்பில் ஓய்வு ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான மூவர் குழு விசாரணை நடத்தும் என அறிவிக்கப்பட்டது. இக்குழுவினர் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி மற்றும் அப்போதைய காமராஜர் பல்கலை. துணைவேந்தர் செல்லத்துரை, பதிவாளர் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.   பொதுவாக, அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால் விசாரணை முடிய நீண்ட காலமாகும்.

ஆனால், சந்தானம்  3 மாதங்களுக்குள் சீலிடப்பட்ட கவரில் கவர்னரிடம் அறிக்கையை தாக்கல் செய்தார். அறிக்கையில் அவர் என்ன குறிப்பிட்டிருந்தார் என்பது இதுவரை மர்மமாகவே நீடிக்கிறது. ஏன் ெவளியிடவில்லை என்று மக்கள் தரப்பில் கேள்வி எழுந்துள்ளது. உயரதிகாரியை சேர்க்காதது ஏன்?: இவ்வழக்கை பொறுத்தவரை போலீசார், சிபிசிஐடி மற்றும் சந்தானம் கமிஷன் தரப்பில் நிர்மலாதேவியிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை அறிக்கை தயார் செய்யப்படவில்லை. மூன்று தரப்பும் நிர்மலாதேவியிடம், ‘‘உண்மை தகவல்களை மறைக்க வேண்டும். நாங்கள் கூறியதுபோலத்தான் அனைத்து விசாரணையிலும் தெரிவிக்க வேண்டும்’’ என ஒரு வகுப்பையே நடத்தியதாக கூறப்படுகிறது.  அதுமட்டுமல்ல. உடந்ைதயாக இருந்ததாக கூறப்பட்ட முருகன், கருப்பசாமியை தவிர வேறு யாரும் வழக்கில் சேர்க்கப்படவில்லை. காமராஜர் பல்கலையில் உயர் பதவி வகிப்பவர், புத்தாக்க பயிற்சி நிலைய இயக்குனர் உள்ளிட்ட பலரை வழக்கில் சேர்க்காதது இன்றுவரை புரியாத புதிராக உள்ளது.

மேலும்,  விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கு தற்போது திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தங்களை விடுவிக்க கோரி நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி தொடர்ந்து கீழமை நீதிமன்றங்கள், ஐகோர்ட் மதுரை கிளையில் பலமுறை மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் முருகன், கருப்பசாமி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இருவருக்கும் ஜாமீன் வழங்கியது. தற்போது இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். ஆனால் நிர்மலாதேவிக்கு மட்டும் ஓராண்டாகியும் இதுவரை ஜாமீன் தரப்படாதது புரியாத புதிராகவே உள்ளது. ஜாமீன் இழுத்தடிப்பு : விபசார வழக்குகளில் கூட கைதான 15 நாட்களில் ஜாமீன் வழங்கப்படுகிறது. நிர்மலாதேவி வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், பாலியல் தொழில் தடுப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவின்படிதான் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் அதிகபட்சம் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் மட்டுமே விதிக்கப்படும். ஜாமீனில் விடுவிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. சுமார் ஓராண்டாக ஜெயிலில் இருந்தும், நிர்மலாதேவிக்கு ஜாமீன் மறுக்கப்படுவது ஏன் என சாதாரண பொதுமக்களுக்கே பல கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், ஜாமீனில் விட்டால் நிர்மலாதேவி, தமிழக அரசில் உயர் பொறுப்பில் உள்ளவர், காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஆளுங்கட்சியினருடனான தொடர்பை அம்பலப்படுத்தி விடுவார். எனவே, இவரை ஜாமீனில் விடக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது என சட்ட ஆலோசகர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

மிரட்டி வாங்கிய வாக்கு
மூலம் : திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்ற விசாரணைக்கு நிர்மலாதேவி உட்பட மூவரும் ஆஜராகும்போது முருகன், கருப்பசாமி ஆகியோர், ‘இவ்வழக்கில் எங்களை பலிகடாவாக்குகின்றனர். உயர் பொறுப்பில் உள்ளவர்களை காப்பாற்ற எங்களை சிறையிலே கொல்ல சதி நடக்கிறது’ என தெரிவித்தனர்.  இதையடுத்து, கடந்த ஜனவரி 30ம் தேதி விசாரணைக்கு ஆஜரான நிர்மலாதேவி, ‘‘சிபிசிஐடியில் நான் அளித்ததாக வெளியான வாக்குமூலம் பொய்யாக புனையப்பட்டது. என்னை மிரட்டி வெற்று காகிதத்தில் வாக்குமூலம் வாங்கினர். விசாரணையில் நான் முருகன், கருப்பசாமி உள்ளிட்ட யார் பேரையும் குறிப்பிடவில்லை. நான் சொல்லாததை திரித்து வாக்குமூலமாக வெளியிட்டுள்ளனர்’’ என தெரிவித்தார். இது பல்வேறு ஊடகங்களில் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திடீர் பாதுகாப்பு அதிகரிப்பு: இதனைத்தொடர்ந்து கடந்த பிப்.14ம் தேதி, மீண்டும் நிர்மலாதேவி விசாரணைக்கு ஆஜரானபோது 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவரிடம் பேட்டி காணவும், புகைப்படம் எடுக்கவும் சென்ற பத்திரிகையாளர்களை போலீசார் கீழே தள்ளினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. நிர்மலாதேவியிடம் யாரையுமே நெருங்க விடவில்லை. எப்போதும் குறைந்த எண்ணிக்கையில் வரும் போலீசார் அன்று வழக்கத்தை விட அதிகளவில் உடன் வந்தது ஏன்? இவ்வழக்கில் மேலும், பல முக்கிய தகவல்களை அவர் நிருபர்களிடம் வெளியிடக்கூடும் என்ற அச்சமே காரணமென கூறப்படுகிறது.  தொடர் சிறை வாசத்தால் நிர்மலாதேவிக்கு முதுகுவலி மற்றும் நெஞ்சு வலி பாதிப்பு ஏற்பட்டது.

இதற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டபோதிலும் உள்நோயாளியாக அனுமதிக்காமல், அவசர அவசரமாக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, சுமார் 3 மணி நேரத்துக்குள் மீண்டும் மதுரை சிறைக்கு ெகாண்டு செல்லப்பட்டார்.  கொலை குற்றவாளிகளை கூட உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கும்போது, நிர்மலாதேவி விரட்டி அடிக்காத குறையாக மருத்துவமனையிலிருந்து உடனடியாக அனுப்பப்பட்டிருக்கிறார்.

எந்த தவறும் இல்லை
பேராசிரியர் முருகன் கூறுகையில், ‘‘இந்த வழக்கில் செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருந்தது மிகவும் வேதனையளிக்கிறது. குற்றம் செய்துவிட்டு சாதாரணமாக சிறையில் இருப்பது என்பது வேறு. குற்றம் ஏதும் செய்யாமல் சிறையில் ஒவ்வொரு நாளையும் கடத்துவது என்பது நரக வேதனையாக இருந்தது. இருந்தபோதும் எங்கள் மீது தவறு இல்லை என்று நீதித்துறை வாயிலாக கண்டிப்பாக நிரூபிப்போம்’’ என்றார்.

செரீனா வழக்கு போலவே...
கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் பரபரப்பு செய்தியாக வலம் வந்த மதுரை பெண் செரீனா வழக்கு ஞாபகமிருக்கிறதா? அரசியல் விளையாட்டில் பந்தாடப்பட்ட பெண் அவர். இவரது வீட்டில் கஞ்சா இருந்ததாக கூறி 2003ல் போலீசார் இவரை கைது செய்தனர். லட்சக்கணக்கான பணமும் இவரது வீட்டில் கைப்பற்றியதாக போலீசார் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இவருக்கும் ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டது. இவருடன் யாரையும் பேசக்கூட போலீசார் அனுமதிக்கவில்லை. இவர் தரப்பில் வாதாட டெல்லியிலிருந்து கபில்சிபல் வந்தபோதுதான் செரீனா கைதானதன் பின்புலம் தெரிய தொடங்கியது. இவர் சசிகலாவின் கணவர் நடராஜனுடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்தார். இது சசிகலாவுக்கு எரிச்சலை ஏற்படுத்த, அதன் காரணமாக வழக்கு புனையப்பட்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் பெரும்  போராட்டத்திற்கு பின்னர் 2006ல் இந்த வழக்குகளிலிருந்து விடுபட்டார் செரீனா. அதேபோல தற்போதைய அதிமுக ஆட்சியில், மிகப் பெரிய பதவியில் இருப்பவர்கள், அரசியல் புள்ளிகள், கல்வித்துறை அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக நிர்மலாதேவி பலிகடாவாக்கப்படுகிறார் என பரபரப்பாக பேசப்படுகிறது.

அந்த மூவரை ஏன் வழக்கில் சேர்க்கவில்லை?
நிர்மலாதேவியின் வக்கீல் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது: நிர்மலாதேவி வழக்கு சிபிசிஐடி விசாரிப்பதற்கான வழக்கு அல்ல. உண்மை குற்றவாளிகளை மறைக்க, தப்பிக்க வைக்க மட்டுமே சிபிசிஐடி இந்த வழக்கை ஏற்று நடத்துகிறது. செல்போன், கம்ப்யூட்டரில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. நிர்மலாதேவியை ஒரு பகடைக்காயாக மட்டுமே உபயோகப்படுத்தி இருக்கின்றனர். புத்தாக்க பயிற்சி, என்சிசி பயிற்சி, முக்கிய பிரமுகர் வருகைக்காகவே அழைத்து வரச்சொல்லி, மாணவிகளை தவறான முறையில் பயன்படுத்தி உள்ளனர்.

தொலைபேசி அழைப்பில் உள்ளதுபோல, தொலைதூர கல்வி இயக்குனர், அப்போதைய துணைவேந்தர், அவர் தாத்தா அல்ல என குறிப்பிட்டுள்ளது மிகவும் முக்கியமானது. இந்த மூவரையும் வழக்கில் சேர்க்கவில்லை. நிர்மலாதேவிக்கு தெரியாமலே அவர் அழைத்து வந்த மாணவிகளை தவறாக பயன்படுத்தி உள்ளனர். இவ்விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் உள்ளனர். மேலும் கவர்னர் மாளிகையில் உள்ள உயரதிகாரி ஒருவர், இவரிடம் தொடர்ச்சியாக செல்போனில் பேசி இருக்கிறார். இதை முற்றிலுமாக மறைத்து இந்த ஆதாரங்களை காவல்துறை அளித்திருக்கிறது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : anyone , Bail rejected, Nirmaladevi
× RELATED தமிழக சட்டமன்ற தேர்தல்: நடிகர்...