×

தேர்தலால் உறவுக்குள் வந்த சோதனை அரசியல் வேறு சொந்தம் வேறு: அன்புமணிக்கு விஷ்ணு பிரசாத் பதிலடி

சென்னை: அரசியலையும் சொந்தத்தையும் கலக்க விரும்பவில்லை என்று அன்புமணிக்கு, அவரது மனைவியின் தம்பியும் காங்கிரஸ் செயல் தலைவருமான விஷ்ணு பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ண பிரசாத். முன்னாள் எம்எல்ஏவான இவர் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது சகோதரி சவுமியா, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியின் மனைவியாவார். சவுமியாவின் குடும்பம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தது. அன்புமணி பாமகவை சேர்ந்தவர். தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இந்த கூட்டணி அன்புமணி குடும்பத்திலும் விரிசலை ஏற்படுத்தி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், எதனால் இந்த கூட்டணி ஏற்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்க அன்புமணி நேற்று முன்தினம் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். இதில், விஷ்ணு பிரசாத் தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘‘அவர் எங்களை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.  ‘‘இவ்வளவு கடுமையாக அவர் எங்களை விமர்சிப்பார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. இது எனக்கு மட்டுமல்ல, எனது மனைவிக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இப்படி எங்களை அவர் விமர்சனம் செய்தால் காங்கிரசில் அவருக்கு ஒரு சீட் கிடைக்கும். இதற்காக 30 ஆண்டு கால உறவையே விட்டுகொடுப்பார்’’ என்று  நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று அன்புமணி கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி சொன்னது போல் என்னிடம் எந்த அறிக்கை வெளியிடவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லவில்லை.

காங்கிரஸ் செயல் தலைவர் என்ற முறையில் பொறுப்பு மற்றும் கடமையின் ஒரு பகுதியாக 40 தொகுதியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் நான் அறிக்கை வெளியிட்டேன். அதில், ஒரு தொகுதிக்காக பேசவில்லை. 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பேசினேன். நான் நம்மிடையே உள்ள உறவுகளுக்கு தற்போது வரை மதிப்பு அளித்துள்ளேன். இது வருங்காலத்திலும் தொடரும். நான் அரசியலையும், உறவுகளையும் ஒன்றாக கலக்க விரும்பவில்லை. கடந்த 2009, 2014ம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் எனக்கு எதிராகவும், எனது தந்தைக்கு எதிராகவும் பாமக பிரச்சாரம் செய்தது. ஆனால், இதனை நாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Vishnu Prasad ,party , Politics is different, belongs to the other, love, Vishnu Prasad
× RELATED ‘உங்க சங்காத்தமே வேணாம்’ உலக சுகாதார...