×

கொடைக்கானலில் விதிமீறிய கட்டிடங்களுக்கு சீல் : அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

திண்டுக்கல் : கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவின்படி விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு இரண்டாவது கட்டமாக சீ்ல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் ஈடுபட்டுள்ள நகராட்சி அதிகாரிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானலில் பொதுகட்டிடங்கள், குடியிருப்பு பகுதிகளை தவிர மீதமுள்ள 258 வணிக வளாக கட்டிடங்களுக்கு சீல் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. அதன்படி கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். சீல் வைக்கும் கட்டிடங்களுக்கு 15 நாட்களுக்கு முன்னர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும், ஆனால் எவ்வித முன்னரிவிப்புமின்றி சீல் வைத்துள்ளதாக கட்டிடங்களின் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனை கண்டித்து நகராட்சி அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நாளை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக கட்டிடங்களின் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். விடுதிகள், உணவகங்களுக்கு சீல் வைப்பதால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அனைத்து உரிமையாளர்களுக்கும் முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியானது ஒரு வாரம் நடைபெறும் என அவர்கள் தகவல் அளித்துள்ளனர். கொடைக்கானலில் குடியிருப்புகள், கல்வி நிலையங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் புதிய மாஸ்டர் பிளான் நடைமுறைக்கு வரும் வரை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : buildings ,Kodaikanal , Kodaikanal, False Buildings, Seal, High Court Branch
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்