×

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 மாதம் காலஅவகாசம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலம் முடிவடைந்த நிலையில், மேலும் 4 மாதம் கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த 2017 செப்டம்பர் 25ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. 3 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அரசாணையில் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நவம்பர் 22ம் தேதிதான் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையை தொடங்கினார். இதனால், ஆணையத்திற்கு மேலும், 6 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பிறகு சசிகலா தரப்பு தாங்களும் வாக்குமூலம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. மேலும், ஆணையம் சார்பில் பல சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டியிருந்தது. இதனால், மீண்டும் 4 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஆணையம் சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 150 பேரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளது. சசிகலா தரப்பில் இதுவரை வாக்குமூலம் அளித்த 13 பேரை தவிர்த்து மற்றவர்களிடம் குறுக்கு விசாரணை முடிந்துள்ளது. தற்போது விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துடன் விசாரணையை முடிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே ஆணையம், அறிக்கை தயாரிக்கும் பணி நடந்தது. தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது. 50 சதவீதம் அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், சசிகலா தரப்பில் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், வேலுமணி, வீரமணி உள்ளிட்ட பலரை விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை வக்கீல் மூலம் தாக்கல் செய்துள்ளார். இருப்பினும், ஆணையம் சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளது. எனவே, ஆணையம் சார்பில் கடந்த 9ம் தேதி மேலும் 4 மாத காலஅவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. தமிழக அரசு அந்த கடிதத்திற்கு பதில் அளிக்காமல் மவுனம் காத்தது. இந்நிலையில், ஆணையத்தின் காலக்கெடு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து மேலும் 4 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayalalithaa ,commission ,Arumugamasi , Jayalalitha, mystery death, Arumugamasi Commission, Tamil Nadu government
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி...