×

பத்திரிகையாளர்கள் சரமாரி கேள்வி: ஊழல் கட்சி என விமர்சித்து விட்டு அதிமுகவுடன் கூட்டணியா? பதிலளிக்க முடியாமல் அன்புமணி பாதியிலே சென்றதால் பரபரப்பு

சென்னை: அதிமுகவை ஊழல் கட்சி என்று கடுமையாக விமர்சித்து விட்டு கூட்டணி வைத்தது ஏன் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணியிடம் பத்திரிகையாளர்கள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் பதில் அளிக்க முடியாமல் அன்புமணி பாதியிலேயே சென்றார்.  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாமக செயற்குழு, பொதுக்குழுவில் கூட்டணி தொடர்பான முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரம் ராமதாசுக்கு வழங்கப்பட்டது. அந்த அதிகாரத்தை வைத்து அதிமுகவுடன் மக்களவை தேர்தலில் கூட்டணி வைப்போம் என்று முடிவு எடுத்து ராமதாஸ் அறிவித்துள்ளார்.  கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டன் முதல் நிர்வாகிகள் வரை அழைத்து பேசி இந்த முடிவை ராமதாஸ் எடுத்துள்ளார். இந்த முடிவுக்கு பிறகு அதிமுகவுடன் தேர்தல் தொடர்பாக ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். அந்த ஒப்பந்தம் போடுவதற்கு முன்பாக தமிழ்நாட்டை சேர்ந்த பிரச்னைகள் மற்றும் உரிமைக்காக தீர்வு காண வேண்டும் என்பதற்காக 10 அம்ச கோரிக்கையை முதல்வரிடம் கொடுத்தோம்.

இந்த கோரிக்கைகள் தமிழகத்தின் நலன் சார்ந்தது தான். அதிமுகவுடன் சென்றால் நிச்சயமாக 10 கோரிக்கைகளை உறுதியாக எங்களால் நிறைவேற்ற முடியும் என்ற நோக்கத்திற்காகத்தான் அதிமுகவுடன் கூட்டணிக்கு சென்றிருக்கிறோம். அதிமுக, திமுகவுடன் கூட்டணி செல்ல மாட்டோம் என்று சொன்னது உண்மை தான். அதை நான் மறுக்கவில்லை. அன்றைய சூழல் வேறு. அன்றைய சூழலில் கருணாநிதி இருந்தார். ஜெயலலிதா இருந்தார். இன்று வேறு சூழல் இருக்கிறது. இன்று இரண்டு தலைவர்களும் இல்லை. அதை விட முக்கியம் தமிழகத்தின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும். அதை தான் எங்களுடைய நோக்கமாக பார்த்தோம். சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்டு 6 சதவீதம் ஓட்டுக்களை பெற்றோம். ஆனால், அதற்கு ஏதாவது ஒரு அங்கீகாரம் எங்களுக்கு கிடைத்ததா?. தமிழக மக்களும் எங்களுக்கு  அங்கீகாரம் கொடுக்கவில்லை.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் நிறைவேற்றலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தமிழகத்தில் இனி எந்த கட்சியும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால், தான் எங்களுடைய வியூகத்தை மாற்றியிருக்கிறோம். இது நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளோம். சட்டப் பேரவை தொடர்பாக இப்போது கூற முடியாது.  அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தது உண்மை தான். அதை நான் மறுக்கவில்லை. இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்தார்களே? ஏன் கூட்டணி வைத்தார்கள் என்று கேட்கலாம். அப்படி பார்த்தால் இந்தியாவில் எந்த கட்சியும், எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க முடியாது. எங்களுடைய நோக்கமே தமிழர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம். அதிமுகவுடன் கூட்டணிக்காக எங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்கள் கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எங்கள் கட்சியினர் ஏற்று கொண்டுள்ளனர். அதிமுகவினர் ஏற்று கொண்டுள்ளனர்.

அந்த கூட்டணி உங்களுக்கு(பத்திரிகையாளர்) பிடிக்கவில்லை என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது. அமைச்சர்கள் தொடர்பாக ஆளுநரிடம் அளித்த புகாரில் உண்மை இருந்தால் விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவை தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் உள்ள பல முக்கிய கட்சிகள் கூட்டணிக்காக எங்களை அணுகினார்கள். இது தேர்தலின்போது இயல்பு தான். ஆனால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிமுகவுடன் போக வேண்டும் என்று வலியுறுத்தினர். நாங்கள் பலமுறை நல்ல தேர்தல் அறிக்கை வைத்தோம். மக்கள் பாராட்டினர். ஆனால் மக்கள் ஓட்டு போடவில்லை. அதனால் எங்கள் வியூகத்தை மாற்றியுள்ளோம். நாங்கள் கண்ட 4 தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. 5வது தேர்தலில் எங்கள் வியூகத்தை மாற்றியுள்ளோம். பாமக தலைமை எனக்கு வாய்ப்பு கொடுத்தால் மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

அடுக்கடுக்கான கேள்வி அன்புமணி திணறல்
பத்திரிகையாளர்கள் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பல்வேறு கேள்வி கணைகளை தொடுத்தனர். இதற்கு பதில் அளிக்க முடியாமல் அன்புமணி திணறினார். கேட்ட கேள்விகளுக்கும் மழுப்பலான பதிலையே அளித்தார். பத்திரிகையாளர் மீது வழக்கத்துக்கு மாறாக கோபப்பட்டார். கேள்வி கேட்கும் ஒவ்வொரு பத்திரிகையாளரிடமும் எந்த நிறுவனம் என்று கேள்வி கேட்டு அதன் பின்னரே அவர் பதில் அளித்தார். கேள்வி கேட்ட பல நிருபர்களின் மைக்கை ஆப் செய்யுங்கள் என்று பகிரங்கமாக எச்சரித்தார். இதனால், பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாததால் பாதியிலேயே பேட்டியை முடித்து விட்டு சென்று விட்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

பதிலை தவிர்த்தார்
பேட்டியின் போது, “அதிமுக கட்சி ஊழல் மிகுந்த கட்சியா, இல்லையா என்ற கேள்விக்கு எந்த பதிலும் அன்புமணி அளிக்கவில்லை. குட்கா ஊழல் புகாரில் சிக்கி சி.பி.ஐ. விசாரணையில் சிக்கியுள்ள அமைச்சர்களுடன் பிரசாரம் செய்வீர்களா, கூட்டணிக்காக பணம் வாங்கினீர்களா என்பதற்கும் அன்புமணி பதில் அளிக்கவில்லை. அந்த கேள்வியை கேட்டபோது அவர் கடும் கோபமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சீட்டுக்காக 30 ஆண்டு உறவை விட்டு விட்டார்
அன்புமணி கூறுகையில், ‘‘காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணு பிரசாத், எங்களை கடுமையாக விமர்ச்சித்துள்ளார். இப்படி அவர் எங்களை விமர்சனம் செய்வார் என்று நினைக்கவில்லை. இது எனது மனைவிக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. விமர்சனம் செய்தால் அவருக்கு ஒரு சீட் கிடைக்கும். இதற்காக 30 ஆண்டு கால உறவை விட்டுக் கொடுப்பார் என்று நினைக்கவில்லை’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : party ,AIADMK ,Dhammani , Journalists, corrupt party, AIADMK, Anbumani
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...