×

வடகிழக்கு மாகாணங்களை மற்றொரு காஷ்மீராக மாற்ற பா.ஜ.க முயற்சி : காங்கிரஸ் குற்றச்சாட்டு

இட்டாநகர்: அருணாச்சலபிரதேச தலைநகர் இட்டாநகரில் நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறையால் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காக அருணாச்சலபிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி வன்முறையை தூண்டிவிட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் தக்கம் சஞ்சோய், மதமு அரசியல் வாழ்க்கையில் அருணாச்சலப்பிரதேசத்தில் இது போன்ற வன்முறைகளை பார்த்ததே இல்லை என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் வடகிழக்கு மாகாணங்களை மற்றொரு காஷ்மீராக மாற்ற பாரதிய ஜனதா முயற்சிப்பதாக சாடினார். நிரந்தர குடியுரிமை சான்றிதழ் வழங்குவதை தேர்தலுக்கு பின்னர் பாரதிய ஜனதா தூக்கி வீசிவிடும் என்றார்.

நாங்கள் அரசு அதிகாரத்தில் தற்போது இல்லை. மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் குழப்பங்களுக்கு தீவிர ஆலோசனை செய்து பிரச்சனைக்கு தீர்வு காணலாம். ஆனால் பாரதிய ஜனதா இதற்கான எந்த ஒரு முயற்சிகளிலும் ஈடுபடவில்லை என்பதே உண்மை. அருணாச்சலப்பிரதேசத்தில் நிலவும் அசாதாரணமான சூழலுக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார். ஆயிரக்கணக்கான மக்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களை பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாவதில்லை என்றார். காங்கிரஸ் கடந்த 1965 முதல் இங்கு அமைதியை பராமரித்து வருகிறது. ஆனால் தற்போதைய மோசமான சூழலுக்கு பாஜக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

ஆனால் காங்கிரஸ் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாரதிய ஜனதா நிரந்தர குடியுரிமை சான்றிதழ் பரிந்துரை ஏற்கப்படாத நிலையில், காங்கிரஸ் சில குறிப்பிட்ட பிரிவினரை தூண்டிவிட்டிருப்பதாக புகார் தெரிவித்துள்ளது. நிரந்தர சான்றிதழ் பரிந்துரையை நிராகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். அருணாச்சலப்பிரதேசத்தில் 6 பழங்குடியின சமூகத்தினருக்கு நிரந்தர குடியுரிமை சான்றிதழ் வழங்குவதற்கான பரிந்துரையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர். இதன் காரணமாக அங்கு இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,provinces ,North-East ,Kashmir ,Congress , Itanagar, violence, Kashmir, Congress accusation
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...