×

கொடைக்கானல் வனப்பகுதியில் 50 எக்டேர் சவுக்கு மரங்கள் அகற்றம்

* சோலை மரங்கள் நட வனத்துறை திட்டம்

கொடைக்கானல் :  கொடைக்கானல் வனப்பகுதியில் சவுக்கு மரங்களை அகற்றும் பணி துவங்கியுள்ளது. கொடைக்கானல் வனப்பகுதியில் 7,000 ஏக்கர் நிலப்பரப்பளவில் சவுக்கு மரங்களும் தைலமரங்களும் உள்ளன. இந்த மரங்களை அகற்றுவதற்கு சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பரீட்சார்த்த முறையில் ஐம்பது எக்டேர் அளவிற்கு சவுக்கு மரங்களை அகற்றி அவற்றில் புல்வெளிகள் அமைக்கவும் சோலை மரங்களை நடவும் வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுபற்றி கொடைக்கானல் வனச்சரக மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘கொடைக்கானலில் ஏற்படும் காட்டுத் தீயை கண்டறிந்து கட்டுப் படுத்துவதற்கு செயற்கைக்கோள் மூலம் கண்டறியும் நவீன தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் எங்கு காட்டுத்தீ ஏற்பட்டாலும் உடனே கண்டறியப்பட்டு அந்தப் பகுதிக்கு வனத்துறையினர் சென்று காட்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கொடைக்கானல் வனப்பகுதி சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் எக்டேர் அளவிற்கு உள்ளது. இதில் 7,000 எக்டேர் அளவிற்கு தைலமரங்களும் சவுக்கு மரங்களும் உள்ளன. தமிழ்நாடு புதுமை முயற்சி திட்டத்தின் கீழ் 50 எக்டேர் அளவிற்கு பரீட்சார்த்த முறையில் சவுக்கு மரங்களை அகற்றி அந்த பகுதியில் சோலை மரங்களை நடவும் புல்வெளிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த பகுதியில் உள்ள சவுக்கு மரங்கள் அடியோடு வெட்டப்பட்டு அகற்றப்படும். குண்டாறு வனப்பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளுக்கு இந்த பகுதி பராமரிக்கப்பட்டு வரும். மூன்று ஆண்டுகளில் இந்த பகுதியில் மீண்டும் சவுக்கு மரங்கள் வராமல் இருப்பதை கவனித்து புல்வெளிகளும் சோலை மரங்கள் வளர்கிறதா என்று கவனித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  கஜா புயலில் சாய்ந்த மரங்கள் கொடைக்கானல் பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு வினியோகிக்க அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. கொடைக்கானல் மேல்மலை பகுதியைச் சேர்ந்த பரப்பாறு நீர்த்தேக்க மேம்பாட்டு பணிகளை செய்வதற்கு கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். இந்த பணிகள் விரைவில் தொடங்கும்’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodaikanal ,forest , Kodaikanal ,Forest Department,Pine Tree
× RELATED பற்றியது பயங்கர காட்டுத்தீ புகையில் திணறும் ‘இளவரசி’