50வது ஹாட்ரிக் மெஸ்ஸி அசத்தல்

செவில்லி: ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில், பார்சிலோனா அணி 4-2 என்ற கோல் கணக்கில் செவில்லா அணியை வீழ்த்தியது. நடப்பு சீசனில் தனது 25வது லீக் ஆட்டத்தில் செவில்லா அணியுடன் மோதிய பார்சிலோனா அணி, தொடக்கத்தில் சற்று தடுமாற்றத்துடன் விளையாடியது. இதை பயன்படுத்திக் கொண்ட செவில்லா அணி, 22வது நிமிடத்தில் நவாஸ் அபாரமாக கோல் அடிக்க 1-0 என முன்னிலை பெற்றது. இதையடுத்து, பார்சிலோனா அணி நட்சத்திர வீரரும் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி 26வது நிமிடத்தில் கோல் அடிக்க, 1-1 என சமநிலை ஏற்பட்டது. 42வது நிமிடத்தில் செவில்லா வீரர் மெர்காடோ கோல் அடிக்க மீண்டும் அந்த அணி முன்னிலை பெற்றது. இடைவேளையின்போது செவில்லா 2-1 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் ஒருங்கிணைந்து விளையாடிய பார்சிலோனா அணிக்கு, மெஸ்ஸி 67வது மற்றும் 85வது நிமிடங்களில் அபாரமாக கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையில் இது அவரது 50வது ஹாட்ரிக் ஆகும்.  பார்சிலோனா அணிக்காக 585 கோல், அர்ஜென்டினா அணிக்காக 65 கோல் என இதுவரை 650 கோல் போட்டுள்ளார். கடைசி கட்டத்தில் சுவாரெஸ் ஒரு கோல் போட (90’+3), பார்சிலோனா அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. பார்சிலோனா 25 போட்டியில் 57 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அத்கெடிகோ மாட்ரிட் (47), ரியல் மாட்ரிட் (45) அடுத்த இடங்களில் உள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Messi , hat trick, Messi
× RELATED ஃபிபா விருது: சிறந்த வீரர் மெஸ்ஸி, வீராங்கனை மேகன்: இவர் யாரென தெரிகிறதா?