×

17 ஆண்டு போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா - தலிபான் இடையே கத்தாரில் இன்று 2ம் கட்ட பேச்சு

காபூல்: ஆப்கானிஸ்தானில் 17 ஆண்டுகளாக நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா-தலிபான் இடையே கத்தாரில் இன்று 2ம் கட்ட பேச்சு தொடங்குகிறது. அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட போராக நடந்து வருவது ஆப்கானிஸ்தான் போர். ஒசாமா பின்லேடனின் ‘அல் கொய்தா’ அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 2001, செப்டம்பர் 11 தேதி அமெரிக்காவில்  நியூயார்க்கின் இரட்டை கோபுரம், ராணுவ தலைமையகமான பென்டகன் ஆகியவற்றின் மீது விமானங்களை மோதி பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த அமைப்பின் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்கள் புகலிடம் அளித்தனர். இதையடுத்து, ஆப்கான் மீது கடந்த 2001ம் அக்டோபர் மாதம், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படை தாக்குதலை தொடங்கியது. அங்கு தலிபான் ஆட்சி அகற்றப்பட்டு, புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. மேலும், கடந்த 17 ஆண்டுகளாக அமெரிக்க படை ஆப்கானில் முகாமிட்டு, தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், ஆப்கான் ராணுவத்தினருக்கு அமெரிக்க ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது. ஆப்கான் போரிலிருந்து நேட்டோ படைகள் படிப்படியாக வெளியேறி விட்டன. ஆனால், அமெரிக்கப்படை மட்டும் அங்கு கடந்த 17 ஆண்டுகளாக முகாமிட்டுள்ளது.

அமெரிக்காவின் மிக நீண்ட போரை தொடர தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்பவில்லை. இதை முடிவுக்கு கொண்டு வர தலிபான் அமைப்பினருடன் அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்ட மராத்தான் பேச்சுவார்த்தை கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த மாதம் நடந்தது. சர்வதேச தீவிரவாத அமைப்புகளுக்கு ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுக்க மாட்டோம் என தலிபான்கள் அளித்த உறுதியுடன் இந்த பேச்சுவார்த்தை முடிந்தது. இந்நிலையில், 2ம் கட்ட பேச்சுவார்த்தை தோகாவில் இன்று தொடங்குகிறது. இதில், அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஜல்மே கலில்ஷாத், தலிபான் குழு தலைவர் முகமது அப்பாஸ் தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதே நேரம், ஆப்கான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் பிடிவாதமாக மறுத்து வருகின்றனர். இருப்பினும், 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஏதாவது ஒரு சமரசத்துக்கு தலிபான்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : talks ,Taliban ,US ,Qatar ,war , war, USA - Taliban, Qatar
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை