×

உலகம் முழுவதும் சர்ச்சுகளில் இருந்த பாதிரியார்கள் மீதான பாலியல் புகார் ஆவணங்கள் திடீர் மாயம்: வாடிகன் மாநாட்டில் பரபரப்பு

வாடிகன் சிட்டி: ‘சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதிரியார்களுக்கு எதிரான ஆவணங்கள், தேவாலயங்களில் அழிக்கப்பட்டுள்ளன’ என வாடிகன் மாநாட்டில் தெரிவிக்கப்ட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கத்தோலிக்க தேவாலயங்களில் சிறுவர், சிறுமிகள்  பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சமீப காலமாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஜெர்மனியில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் 1946ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 3,677 சிறார்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பாதிரியார்களுக்கு எதிரானவை. இந்தியாவிலும் கேரளா உட்பட சில மாநிலங்களில் கன்னியாஸ்திரிகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிரியார்களின் இந்த செயல்களால், போப் பிரான்சிஸ் கவலை அடைந்தார்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது பற்றி விவாதிக்க, கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமையகமான வாடிகன் சிட்டியில், போப் தலைமையில் 4 நாள் மாநாடு நடந்தது. மாநாட்டின் 3ம் நாளான நேற்று முன்தினம் ‘திருச்சபையில் சிறார்களின் பாதுகாப்பு’ என்ற பெயரில் கூட்டம் நடந்தது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான பிஷப்கள் பங்கேற்றனர்.அப்போது ஜெர்மன் கர்தினால் ரெயின்ஹார்ட் மார்க்ஸ் பேசியதாவது:
கொடூர செயல்கள் குறித்தும், அதற்கு காரணமானவர்கள் பெயர்களும் அடங்கிய ஆவணங்கள் தேவாலயங்களில் அழிக்கப்பட்டுள்ளன அல்லது புகார்கள் குறித்து ஆவணங்கள் தயாரிக்கப்படுவதே இல்லை.

குற்றம் செய்தவர்களை தண்டிப்பதற்கு பதிலாக, பாதிக்கப்பட்டவர்கள் மவுனமாக்கப்படுகிறார்கள். குற்றச்சாட்டுகள் குறித்த நடவடிக்கை குறித்த நேரத்தில் முடிக்கப்பட வேண்டுமென்ற விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் காலில் போட்டு நசுக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் நீதியை பெற தேவாலயங்களை நாடுவதைத் தவிர வேறு வழிகளும் இல்லை. எனவே, இந்த விஷயத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும். இதேபோல், தேவாலயங்களின் நிதி உள்ளிட்ட விஷயங்களிலும் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். வாடிகன் மாநாட்டில் இவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போப் எச்சரிக்கை
மாநாட்டின் நிறைவு கூட்டத்தில் போப் பிரான்சிஸ் நேற்று பேசுகையில், ‘‘முந்தைய பழமையான சில சடங்குகளில் மனித உயிர்களை பலி கொடுப்பது, குறிப்பாக குழந்தைகளை பலி கொடுப்பது நடந்து வந்ததை தற்போது நினைவு கூற வேண்டியிருக்கிறது. குற்றம் செய்த பாதிரியார்கள் நிச்சயம் சாத்தானின் ஆயுதங்களாவர். இனி, இதுபோன்ற புகார்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும். சிறார் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த புகார்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : priests ,churches ,world ,Vatican Conference , church, priests, Vatican
× RELATED தேசிய திருநங்கையர் தினம்: முதல்வர் வாழ்த்து