×

கழிவுநீர் கால்வாயை பல ஆண்டாக சீரமைக்காததால் நோய் உற்பத்தி மையம் தொடங்கி பொதுமக்கள் நூதன போராட்டம்: அம்பத்தூர் மங்களபுரத்தில் பரபரப்பு

அம்பத்தூர்: அம்பத்தூர், மங்களபுரத்தில் சிதிலமடைந்துள்ள திறந்தநிலை கழிவுநீர் கால்வாயை பல ஆண்டாக சீரமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பல்நோக்கு நோய் உற்பத்தி மையம் தொடங்கி பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர். அம்பத்தூர் மண்டலம், 85வது வார்டு மங்களபுரத்தில் குள்ளன் தெரு, பஜனை கோயில் தெரு, பாடசாலை தெரு, நல்ல கிணறு தெரு பகுதிகள் உள்ளன. இங்கு, 600க்கும் மேற்பட்ட வீடுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த தெருக்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய்களை மாநகராட்சி நிர்வாகம் பராமரிப்பதில்லை. இதனால் கால்வாய்கள் பல இடங்களில் உடைந்து கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. சில இடங்களில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அம்பத்தூர் மண்டல நிர்வாகத்திடம் புகார் அளித்தும் கால்வாயை சீரமைக்க எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டிக்கும் வகையிலும், கால்வாய்களில் கழிவுநீர் தேங்குவதால் நோய்கள் உருவாவதை சுட்டிக்காட்டும் விதமாகவும், நேற்று காலை பொதுமக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் ‘பல்நோக்கு நோய் உற்பத்தி மையம்’ ஒன்றை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது அதிமுக அரசை கண்டித்து ஒருவர், ‘காட்பாடி கழனிசாமி சாலை’ என பெயர் சூட்டி குட்டிக்கர்ணம் அடித்து காட்டினார். மேலும் ஒருவர் ‘வென்னீர்செல்வம்’ என பெயர் சூட்டி ஒத்து ஊதினார். இது அப்பகுதி மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்ததால் ஏராளமானோர் கூடினர். தகவலறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, சம்மந்தப்பட்ட அதிகாரிடம் பேசி பிரச்னை குறித்து உடனே தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். எனவே போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், ‘‘இந்த போராட்டத்திற்கு பிறகாவது மங்களபுரத்தில்  உள்ள கழிவுநீர்  கால்வாயை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விரைவில்  பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் புகுந்து ‘காறி துப்பும்’’ போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Center for Disease Control ,Ampathur ,Mangapuram , sewage canal, disease, Ambatur, Mangapuram
× RELATED வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகார்;...