×

பராமரிக்கப்படாத காவலர் அறை புழல் சிறையில் பாதுகாப்பு கேள்விக்குறி: அதிகாரிகள் அலட்சியம்

புழல்: புழல் சிறைச்சாலை அருகே பாதுகாப்பு பணி மேற்கொள்வதற்கு கட்டப்பட்ட காவலர் அறை முறையான பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. இங்கு போலீசார் பணியில் ஈடுபடாததால் மர்ம நபர்கள் சிறைக்குள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை வீசும் நிலை உள்ளது. புழல் மத்திய சிறைச்சாலையில் விசாரணை, தண்டனை மற்றும் பெண்கள் பிரிவு ஆகியவை உள்ளன. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையில் பணியாற்றும் காவலர்களுக்கு சிறைச்சாலை அருகே 170க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புக்கு செல்லும் நுழைவாயில் அருகே ஒரு காவலர் அறை கட்டப்பட்டு, அங்கு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் குடியிருப்புக்கு வந்து செல்லும் அனைவரும்  கண்காணிக்கப்பட்டனர். மேலும், வெளியில் இருந்து மர்ம நபர்கள் சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை வீசுவதும் தடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அங்கு போதிய காவலர்கள் நியமிக்கப்படாததாலும், முறையான பராமரிப்பு இல்லாமலும் இந்த காவலர் அறை பாழடைந்த காணப்படுகிறது.

அதுமட்டுமின்றி கட்டிடத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டும், கதவு சேதமடைந்தும் உள்ளன. இதனால், காவலர் குடியிருப்புக்குள் யார், யார் வருகின்றனர்? என கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், இந்த குடியிருப்புகள் வழியாக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து சிறைச்சாலைக்குள் போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்களை வீசும் அபாயமும் உள்ளது. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் இந்த காவலர் அறை அருகே சிலர் மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதால் குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் உள்ளனர். எனவே, சிறைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து இந்த காவலர் அறையை புதுப்பித்து, அங்கு காவல் பணிக்கு மீண்டும் போலீசாரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : guard room, Security, Prison Jai,
× RELATED புதிய டெண்டர் விடும்வரை ஓய்வுபெற்ற...