×

ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்வதாக 300 பேரிடம் மோசடி விமான நிலையத்தில் தவித்த யாத்ரீகர்கள்: டிராவல்ஸ் ஏஜென்சி ஊழியர்களுக்கு வலை

மீனம்பாக்கம்: மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள பன்வேள் கிராமத்தை சேர்ந்த சுமார் 300 பேர் குறைந்த கட்டணத்தில் ஒரு வாரகால  ஆன்மிக சுற்றுலா செய்ய மும்பையில் உள்ள தனியார் டிராவல்ஸ் ஏஜென்சியிடம் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.20,250 வீதம் கடந்த 4 மாதத்திற்கு முன்பே செலுத்தி உள்ளனர். ஆன்மிக சுற்றுலா செல்ல பணம் கட்டிய 300 பேரில்  பெண்கள் 200 பேர், குழந்தைகள் 25 பேர், ஆண்கள் 75 பேர் என தயாராக இருந்தனர்.  நேற்று முன்தினம் காலை 300 பேரும் ரயில் மூலம் மும்பையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேர்ந்தனர். இவர்களை சம்மந்தப்பட்ட தனியார் சுற்றுலா ஏஜென்சி நிறுவனத்தார் அழைத்து வந்தனர்.
அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு சென்னையில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு 300 பேரையும் தனியார் பேருந்து, வேன் மூலம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியான போர்டிகோவில் அனைவரையும் உட்கார வைத்துள்ளனர். விமானம் நேற்று  காலை 7 மணிக்கு புறப்படும் என கூறப்பட்டது. அவர்களது பாஸ்போர்ட், விசா ஆகியவைகளை வாங்கிக்கொண்டு நீங்கள் எல்லாம் தயாராக இருங்கள் என கூறிவிட்டு ஏஜென்சியினர் வெளியே சென்றனர்.

ஆனால், மணி 9 ஆகியும் எந்த தகவலும் வரவில்லை. இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஏஜென்சியை தொடர்பு கொண்டனர். உங்களுக்காக பெரிய ஸ்பெஷல் பிளைட் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். எனவே நண்பகல் தான் புறப்படும் நிலை உள்ளது, என கூறினர். வடமாநிலத்தவர்கள் விமான நிலையத்தில் இப்படி தங்கி இருப்பது ஒரு வழக்கமான ஒன்று. எனவே விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகளும் இதை ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மீண்டும் ஏஜென்சி நிறுவனத்தினரிடம் தொடர்பு கொண்ட போது போன் 10 மணிக்கு சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே மும்பையில் உள்ள குறிப்பிட்ட நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டபோது அங்கும் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.  பிறகு அவர்கள் தங்களது குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் போனில் பேசி மும்பையில் உள்ள அந்த தனியார் நிறுவனத்தை சென்று பார்த்து விசாரிக்குமாறு கூறியுள்ளனர். அப்போது, அலுவலகமோ பூட்டியிருந்தது.

பின்னர் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் விமான நிலையத்தில் உள்ள இன்டிகோ ஏர் லைன்ஸ் விமான நிறுவன அதிகாரிகளிடம் அவர்களது டிக்கெட்டுகளை காட்டி எத்தனை மணிக்கு விமானம் புறப்படும் என்ற தகவலை விசாரித்தனர். அதனை வாங்கி பார்த்த ஊழியர்கள்,  இது எங்களது நிறுவன பெயரை போட்டு யாரோ போலியாக டிக்கெட்டை தயாரித்துள்ளனர். நீங்கள் இன்டிகோ விமானத்தில் செல்ல யாரும் டிக்கெட் புக் செய்யவில்லை என்றனர். இந்த தகவலை மும்பையில் உள்ள உறவினர்களுக்கு பயணிகள் தெரிவித்தனர். அவர்கள் உடனே நீங்கள் எல்லோரும் சென்னையில் ரயில் டிக்கெட் எடுத்துக் கொண்டு மும்பைக்கு வாருங்கள் என கூறினர். அவர்களும் சென்னை விமான நிலையத்தில் இருந்து வேன் போன்ற வாகனங்களை பிடித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அதன் பின்னர் சென்ட்ரலில் இருந்து டிக்கெட் எடுத்துக்கொண்டு மும்பைக்கு புறப்பட்டு சென்றனர். ஆன்மிக சுற்றுலாவுக்காக சென்னைக்கு ஆசையோடு வந்தவர்கள் பசி பட்டினியோடு, மூட்டை முடிச்சுகளோடு மும்பை திரும்பிய சம்பவம் பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.  அதன் பின்னர் மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் தனியார் ஏஜென்சி நிறுவனத்தினர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அவர்களை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pilgrims ,airport airport ,Travels Agency , pilgrims, airport,
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்