×

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.7 கோடி தங்கம், கரன்சி பறிமுதல்: 8 பேரிடம் விசாரணை

மீனம்பாக்கம்: துபாயில் இருந்து நேற்று காலை 8.40 மணிக்கு எமரேட்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு  வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த அலிகாசிம் (48), ஆஸ்லாம் கான் (24), மகாதர்கான் (29) ஆகியோர் சுற்றுலா பயணியாக துபாய் சென்று, சென்னை திரும்பினர். இவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவர்களது  உடமைகளை சோதித்தனர். அவர்கள் எடுத்து வந்த ஸ்பீக்கர், ஸ்டீரியோ பாக்ஸ்களை கழற்றிப் பார்த்தபோது, அதனுள் தங்க கட்டிகளும், தங்க செயின்களும் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றின் மொத்த எடை 900 கிராம். இதன் சர்வதேச மதிப்பு ரூ.31 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் 3 பேரையும் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், துபாயிலிருந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் காலை 6.10 மணிக்கு மீண்டும் டெல்லிக்கு புறப்பட உள்நாட்டு விமான நிலையத்தில் தயாராக இருந்தது. அப்போது, ஏர் இந்தியா விமான ஒப்பந்த பணியாளர்கள் விமானத்தை சுத்தம் செய்தனர். அப்போது ஒரு சீட்டுக்கு அடியில் கருப்பு கலர் பார்சல் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே ஊழியர்கள் தங்களது பணியை நிறுத்தி விட்டு விமான நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து கருப்பு பார்சலை மெட்டல் டிடக்டர் மூலம் சோதனை செய்தனர்.

அதில் வெடி பொருட்கள் எதுவும் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து அதை திறந்து பார்த்தபோது அதனுள் தங்க கட்டிகள் இருந்தது தெரிந்தது. தங்க கட்டிகளை விமான நிலைய சுங்க துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் விமானம் 15 நிமிடம் தாமதமாக 6.25 மணிக்கு புறப்பட்டு சென்றது. பின்பு அதில் இருந்த 9 தங்க கட்டிகளை ஆய்வு செய்த போது அதன் எடை ஒரு கிலோ 50 கிராம் என தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.36 லட்சம். துபாயில் இருந்து ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ரூ.67 லட்சம் மதிப்புடைய 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் நேற்று ரூ.40.5 லட்சம் மதிப்புடைய தங்கம், வெளி நாட்டு கரன்சி மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.67 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் ரூ.1.7  கோடி மதிப்புடைய கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Investigation ,Dubai , Dubai, gold, currency,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...