×

செஞ்சி காவல் உட்கோட்டத்தில் சிக்னல் கிடைக்காததால் செயலிழந்த வாக்கி டாக்கிகள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல் உட்கோட்டத்தில் மலை, வனப்பகுதியில் உள்ள காவல்நிலையங்களில் வாக்கிடாக்கி சிக்னல் கிடைக்காததால் போலீசாரின் தகவல் தொடர்பில் குறைபாடு ஏற்பட்டுள்ளது.  செல்போன் மூலம் மட்டுமே போலீசார் தொடர்பு கொள்ள முடிகிறது.

தமிழகத்தில் காவல்துறையில் டிஜிபி முதல் பல்வேறு நிலையில் உள்ள போலீசார், பணிகள் தொடர்பாக சக போலீசாரிடம் பேச வாக்கி டாக்கியை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஒரு இடத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை, பணியில் இருக்கும் போலீசாருக்கு தெரியப்படுத்தவும், உயர் போலீஸ் அதிகாரிகள், நினைத்த நேரத்தில், அடுத்த நிலையில் உள்ள போலீஸாரை தொடர்பு கொள்ளவும் வாக்கி டாக்கி முறை பயன்படுகிறது.

முதல்வர் முதல் அதிகாரிகள் வரை செல்லும் பாதைகள் குறித்தும், பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள போலீசாரை அலர்ட் செய்யவும் வாக்கி டாக்கிகளின் பயன்பாடு மிக அதிகம். ஒரு மாவட்டத்தில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களையும் ஒரு குடையின் கீழ் இணைப்பது,  குற்றவாளிகள் குறித்த ரகசிய தகவல்கள், பரிமாற்றங்கள் வாக்கி டாக்கி மூலம் செய்து கொள்ளப்படுகிறது.

காவல்துறையில் தொடர்பு கருவியான வாக்கி டாக்கி செயலிழந்தால் போலீசாரின் பணிகள் கடுமையாகத்தான் இருக்கும். போக்குவரத்து சீரமைப்பு முதல், மாவட்டத்தில் காவல்துறையினரை உஷார்படுத்த வேண்டிய  பணிகள் பாதிக்கப்படும்.  விழுப்புரம் மாவட்டத்தில் சரக டிஐஜி, எஸ்பி மற்றும் உட்கோட்ட டிஎஸ்பிக்கள் தகவல் பரிமாற்றம், வாக்கி டாக்கிகள்  மூலமே மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 600 வாக்கி டாக்கிகள் இப்படி பயன்பாட்டில் உள்ளது.

செஞ்சி காவல் உட்கோட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் கடந்த சில நாட்களாக வாக்கி டாக்கிகள் சிக்னல் கிடைக்காமல் செயலிழந்துள்ளது.  செஞ்சி காவல் உட்கோட்டத்தில் பெருமளவு மலைகிராமங்கள், வனப்பகுதியை கொண்டிருக்கிறது. சத்தியமங்கலம், அவலூர்பேட்டை, அனந்தபுரம் உள்ளிட்ட காவல்நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் இந்த நிலைதான். கிராமங்களில் மோதல் சூழல்நிலை, பாதுகாப்பு பலப்படுத்துவது, திருவிழா மற்றும் குற்றவாளி தப்பிச செல்லும்போது விரட்டி பிடிப்பது, அலார்ட் செய்வது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலாக போலீசார் செல்போன் மூலமே மற்ற காவல்துறையினரை தொடர்பு கொண்டு பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் செஞ்சி காவல் உட்கோட்ட டிஎஸ்பியும் அலுவலகத்திலிருந்து தனது லிமிட் ஸ்டேஷன்களுக்கு வாக்கிடாக்கி மூலம் அறிவுரை, தகவல்களை கூறும்போது இந்த ஸ்டேஷன்களுக்கு தகவல்பரிமாற்றம் தடைபடுகிறது. போலீசார் பணிக்கு செல்லும் பகுதியிலும் அவர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. வாக்கிடாக்கி மூலம் பேசுவதற்கு செல்போன் கோபுரங்களை அமைத்து அதன் மூலம் சிக்னல் கிடைக்கும்.

அதன்படி விழுப்புரம் மாவட்ட காவல்நிலையங்கள் மட்டுமின்றி சென்னையிலிருந்து ஐஜி அலுவலகத்திற்கும், சரக டிஐஜி கடலூர் மாவட்ட காவல்நிலையங்களை வாக்கிடாக்கி மூலம் தொடர்புகொண்டு பேசுமளவிற்கு வசதிகள் இருக்கின்றன. இருப்பினும் மாவட்டத்தில் அதிக குக்கிராமங்களை கொண்டுள்ள செஞ்சி காவல் உட்கோட்டத்தில் சிகன்ல் பிரச்னையால் வாக்கி டாக்கிகள் முடங்கியுள்ளது.  

டவர் அமைக்கும் முயற்சி கைவிடல்

இது குறித்து மாவட்ட காவல்துறை அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், செஞ்சி காவல் உட்கோட்டத்தில் காவல்நிலையங்களில் சிக்னல் பிரச்னையால் வாக்கி டாக்கி செயற்றிருப்பது குறித்து புகார்கள் வந்தன. இது குறித்து எஸ்பி உத்தரவின்பேரில் ஏற்கனவே அந்த பகுதியில் ஆய்வு செய்தோம். பனிக்காலத்தில் சிக்னல் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. பனிகாலம் முடிந்து வெயில் காலம் தொடங்கினால் இந்த பிரச்னை ஏற்படாது. தற்போது மாவட்டத்தில் கல்வராயன்மலை இன்னாடு, விழுப்புரம் எஸ்பி அலுவலகம், மயிலம், புதுச்சேரி எல்லையான கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் வாக்கிடாக்கி டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. செஞ்சியில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து எவ்வளவு செலவாகும் என்றும் மதிப்பீடும் செய்துள்ளோம். இருப்பினும் இந்த டவர் அமைத்தாலும் பனிக்காலங்களில் வாக்கி டாக்கி சிக்னல் கிடைப்பதில் சற்று சிரமம் உள்ளது. எனவே இந்தபகுதியில் டவர் அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gorge , Gingee ,Police ,Walkie talkies ,towers
× RELATED குன்னூரில் 1000 அடி பள்ளத்தில் குதித்து...