×

சுருங்கி வரும் சுங்குடி சேலை உற்பத்தி நெசவாளர் குடும்பங்கள் பரிதவிப்பு

* புவிசார் குறியீடு பெற்றும் அழிந்து வரும் அவலம்
* நெசவுத்தொழிலை காக்க அக்கறை காட்டுமா அரசு?

மதுரை : மதுரைக்கு பெருமை சேர்க்கும் சுங்குடி சேலை உற்பத்தி தொழில் அழிந்து வருவதால், நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. புவிசார் குறியீடு பெற்ற இத்தொழிலை காக்க அரசு அக்கறை காட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சேலைக்கான வரவேற்பும், பெருமதிப்பும் அதிகம்.

அந்த வகையில் தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டுச்சேலைக்கான வரவேற்பு அதிகம். இதே வரிசையில் வாரணாசியில் பனாரஸ், ஒரிசாவில் இக்கத், காஷ்மீரில் மொஷிதாபாத், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பந்த்னி, கர்நாடகாவின் பன்கடி, ஆந்திராவில் போச்சம்பள்ளி என புகழ்மிக்க சேலைகளுக்கான பட்டியல் நீள்கிறது. இந்த வரிசையில் மதுரையின் மகத்தான அடையாளம் காட்டி நிற்கிற ‘சுங்குடி’ சேலைக்கான மவுசு நாடு முழுக்க எகிறி நிற்கிறது.

alignment=



மல்லிக்கு முன்பே :

மதுரை என்றாலே மல்லிகை பூவே முன்னாள் நிற்கிறது. ஆனால் இந்த மல்லிகைக்கும் முன்பே, மதுரையில் சுங்குடிச்சேலைதான் பாரம்பரிய பெருமைக்கான மத்திய அரசின் புவிக்குறியீடு அடையாளத்தை பெற்ற சிறப்பு கொண்டிருக்கிறது. பல்வேறு மதுரை பெருமைக்கான அடையாளங்களில் இந்த மகளிர் ஆடையும் முந்திக் கொள்கிறது.
1955ம் ஆண்டே தமிழக அரசானது இந்த சுங்குடிச்சேலை உற்பத்தியை குடிசைத்தொழிலாக அங்கீகரித்து, வரி விலக்கும் வழங்கியது. ஆனால் அன்று வழங்கப்பட்ட அத்தனை சலுகைகளையும் இன்றைக்கு மொத்தமாக பறித்து விட்டது அரசு. இதனால் சுங்குடி சேலை உற்பத்தி நாளுக்கு நாள் அழிந்து வருகிறது.

பாதித்த பாரம்பரியம் :

மதுரையில் சுங்குடி சேலை உற்பத்தி மிகவும் சரிந்து விட்டது. இந்த சேலை உற்பத்திக்கான ஆட்கள் இல்லை. ஒவ்வொரு நெசவாளியும் அதிக நேரத்தையும், அதிக உழைப்பையும் இந்த சேலைக்காக செலவிட வேண்டும். ஆனால் அதற்கேற்ற லாபம் இல்லை. நெய்த துணியை சலவைக்கு அனுப்பி, கலர் சேர்த்து, பிரிண்ட் போட்டு, கஞ்சிக்கு அனுப்பி, அயர்ன் செய்து கடைகளுக்கு கொண்டு வருவதற்குள் குறைந்தது ஒன்றரை முதல் 2 மாதங்கள் வரை ஆகி விடுகின்றன. தயாரிப்பில் மிகுந்த கஷ்டம் இருக்கிறது. ஆனால் ஒரு சேலையை ஆயிரம் ரூபாய்க்கே விற்க முடியாத நிலை உள்ளது. பவர் லூம் வருகையால் கைத்தறியிலான இந்த பாரம்பரிய சேலை உற்பத்தி பெரிதும் பாதித்துள்ளது.

அத்தனையும் பறித்த அரசு :

மதுரை சுங்குடி சேலை உற்பத்தியாளர் ஓ.ஜி. சரவணன் கூறும்போது, ‘‘வரலாற்று சிறப்பும், பாரம்பரிய பெருமையும் கொண்ட மதுரையின் அடையாளத்தில் ஒன்றாகவே சுங்குடி சேலை இருக்கிறது. ஆனால், இந்த பாரம்பரியத்தைக் காப்பதற்கான திட்டங்கள் இல்லை. சுங்குடி உற்பத்திக்கென மெழுகு, மண்ணெண்ணெய் போன்றவற்றிற்கு அரசு மானியம் வழங்கி வந்தது. இதேபோல், கலரிங் போன்றவற்றிற்கும், கூடத்திற்கும் தேவையான மின்சாரத்தை முன்பு யூனிட் ரூ.1க்கு வழங்கினர்.

இந்த அத்தனை சலுகைகளையும் அரசு பறித்துக் கொண்டு விட்டது. முன்பு அரசு வழங்கிய வரிவிலக்கும் இல்லை. மதுரையில் முதன்முதலாக புவிசார் குறியீடு பெற்ற பெருமை இருப்பினும், இந்த குறியீடு கிடைத்து ஒரு பயனும் இல்லை. நூல் விலையும் ஒரு நிலையில் இல்லை. 40 ரூபாய் விலைக்கு ஏற்றுகின்றனர். போராட்டம் நடத்தினால் வெறும் 10 ரூபாய் இறக்குகின்றனர். மதுரை நகருக்குள் மட்டுமே ஆயிரக்கணக்கான நெசவாளர்களுடன், சுங்குடி விற்பனைக்கென 80 பெரிய வியாபாரிகள் இருந்தனர்.

மதுரையில் மகால் பகுதிகள், சக்கிமங்கலம், நிலையூர், வண்டியூர், ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுங்குடி நெய்தல் இருந்தது. இப்போது எந்த சலுகையும் இன்றி, உற்பத்தி விலையையே பெற முடியாத நிலையில் இந்த சேலை தயாரிப்பும், நெசவாளர்களும் அழிவின் விளிம்பில் இருக்கின்றனர். உற்பத்திக்கான உதவிகள் மட்டுமல்லாது, ஏற்றுமதிக்கான உதவியும் இல்லை. அரசு சிறப்பு கவனம் எடுத்து, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் இந்த தொழிலை திரும்ப உயிர்ப்படுத்த வேண்டும். மதுரையின் பாராம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டும்’’ என்றார்.

15 அடி நீளச்சேலை

தமிழகத்தின் மிக முக்கிய கோடை காலத்திற்கு ஏற்ற அற்புத ஆடையே சுங்குடி சேலையாகும். வயதானோர் இந்த ஆடையை அணிந்தால் வணங்கத் தோன்றும். இளையோர் இதனை அணிந்தால் அழகுக்கு அழகு சேர்க்கும் அதிசயம் நிகழ்த்தி விடும். இந்த சுங்குடிச்சேலை 12 அடி முதல் 15 அடி வரை நீளம் கொண்டிருக்கின்றன. வெள்ளைப் புள்ளிகளோடு தனி வண்ண ஓரமும் கொண்டு காண்போர் இதயத்தை கவ்வி இழுக்கும் அழகு கொண்டுள்ளது.

சேலை உருவாவது எப்படி?


இந்த சேலைகள் உருவாகும் விதமே அலாதியானவை. மதுரைத் தெருக்களில் நீளம் நீளமாக முறுக்கேற்றிய நூல்களைக் கொண்டு நெய்து எடுத்த வெள்ளைப் பருத்தித் துணியில், பென்சிலில் டிசைன் வரைகின்றனர். தொடர்ந்து சிறு வட்டங்கள், புள்ளிகள் வரும் வகையில் துணியில் ஆங்காங்கே பல இடங்களில் முடிச்சுகள் இடப்படுகிறது. தொடர்ந்து உடலுக்கும், ஓரத்திற்கும் பொருத்தமாகத் தனித்தனி சாயமேற்றி உலர வைக்கப்படுகிறது.

காய்ந்ததும் அத்தனை முடிச்சுகளையும் அவிழ்க்க ஒவ்வொரு சேலையிலும் ஆயிரக்கணக்கில் வட்டங்கள், புள்ளிகள் ‘நட்சத்திரக் கூட்டமாக’ காட்சி தந்து எவரும் எதிர்பார்க்காத அற்பு அழகு ‘டிசைனில்’ ஜொலிக்கிறது. காலத்திற்கு ஏற்ப வேக்ஸ், ஸ்கிரீன் என பிரிண்டிங்கில் இந்த சேலைகள் பல மாற்றங்கள் கண்டுள்ளன. ஆனாலும், பருத்தியில் பூத்த இந்த ‘சுங்குடி’ தொழில் நாளுக்கு நாள் அழிவைத் தொட்டு வருகிறது.

அழிவில் இருந்து மீட்க வேண்டும்

மதுரை நிலையூர் கைத்தறி நகரைச் சேர்ந்த நெசவுத்தொழிலாளி துளசி கூறும்போது, ‘‘நெசவுத்தொழில் தற்போது நலிவடைந்து வருகிறது. இந்த தொழிலை ஊக்குவிக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக சுங்குடி உள்ளிட்ட கைத்தறி சேலைகளை இன்றைய நாகரிக உலகில் பெண்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும். இதற்கு அரசு உதவிட வேண்டும்’’ என்றார். நெசவாளர் சங்க முன்னாள் நிர்வாகி சுப்பிரமணி கூறும்போது, ‘‘சுங்குடி உள்ளிட்ட கைத்தறி சேலைகளின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளதால், கடந்த 5 ஆண்டுகளில் இந்த தொழிலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேறு வேலைக்கு சென்றுள்ளனர்.

மேலும் இந்த தொழிலில் ஈடுபடும் ஆண்களின் வருமானம் குறைவாக இருப்பதால் இத்தொழில் செய்யும் ஆண்களுக்கு பொதுவாக பெண் கொடுக்க யாரும் முன் வருவதில்லை.
எனவே இந்த தொழிலை அழிவில் இருந்து காக்க அரசு கூட்டுறவு சங்கங்கள் அமைத்து கோ-ஆப்டெக்ஸ், காதி உள்ளிட்ட அரசு வேலைகளை இத் தொழில் செய்பவர்களுக்கு வழஙக வேண்டும்’’ என்றார்.

எப்படி வந்தது சுங்குடி?


‘சுங்கு’ என்ற தெலுங்குச் சொல்லுக்கு ‘புடவை மடிப்பு’ என்ற பொருளாகும். இவ்வகையில் இச்சொல்லே ‘சுங்கு’ நாளடைவில், ‘சுங்குடி’ என மருவி இருக்கிறது. ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டணத்தில் மஸ்லின் துணி நெய்வதில் கைதேர்ந்த சவுராஷ்டிரர்களை, திருமலை நாயக்கர் மதுரை அழைத்து வந்து ஆதரவளித்தார். இங்கே மெல்லிய பருத்தி இழைகளுடன் பட்டு ஜரிகை இழைகளும் இணைத்து இவர்கள் படைத்த சேலைத்துணியே சுங்குடியாக புகழ் கொண்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shrimp Saw Production Wastes Families , Weavers Families ,Sungudi sarees,trouble
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...